தமிழ்நாடு

பெண் வன்கொடுமை வழக்கு.. கராத்தே மாஸ்டர் அதிரடி கைது!

நெல்லையில் கராத்தே மையம், துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நடத்தி வரும் கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப் என்பவர் பெண் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் வன்கொடுமை வழக்கு.. கராத்தே மாஸ்டர் அதிரடி கைது!
Karate master arrested in women abuse case
நெல்லை மாவட்டம், சுத்தமல்லி மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் கராத்தே பயிற்சி மையங்கள் நடத்தி வந்த அப்துல் வகாப் (37) என்ற பயிற்சியாளர், பெண் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 8 பெண்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்த இந்தச் சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் தாய்மார்களிடம் அத்துமீறல்

பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஒழுக்கமான ஆசிரியராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அப்துல் வகாப், பயிற்சிக்கு வரும் மாணவர்களின் தாய்மார்களைக் குறிவைத்துத் தனது அத்துமீறல்களை அரங்கேற்றியுள்ளார். முதலில் பெண்களை நோட்டமிட்டு, சாதுரியமாகப் பேச்சுக் கொடுத்து அவர்களின் செல்போன் எண்களைப் பெற்றிருக்கிறார். பின்னர், இனிமையான வார்த்தைகள் பேசி அவர்களுடன் தனிமையில் பழகி வந்துள்ளார்.

இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள், சுத்தமல்லி பகுதியில் உள்ள ஒரு டீக்கடை ஊழியரின் மனைவி அளித்த புகாரின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண்ணின் மகள், அப்துல் வகாப்பின் பயிற்சி மையத்தில் பயின்று வந்துள்ளார். மகளை தினமும் அழைத்துச் செல்லும் போது, அப்துல் வகாப் அப் பெண்ணுடன் பழகி செல்போன் எண்ணைப் பெற்று, அவருடன் உறவில் இருந்திருக்கிறார். சுமார் நான்கு ஆண்டுகளாக இந்த உறவு நீடித்ததாகக் கூறப்படுகிறது.

மிரட்டலும், புகாரும்

இந்த விவகாரம் அப்பெண்ணின் கணவருக்குத் தெரியவந்ததையடுத்து, அவர் மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால், அப்பெண் அப்துல் வகாப்பைத் தவிர்த்து வந்துள்ளார். கோபமடைந்த வகாப், கடந்த சில நாட்களுக்கு முன் அப்பெண்ணின் வீட்டிற்கே சென்று, ஏன் தன்னை போனில் எடுக்கவில்லை எனக்கூறி சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அழைக்கும்போது வர வேண்டும் என மிரட்டியுள்ளார். இதனால் அப்பெண் சத்தம் போட்டதால், பொதுமக்கள் கூடினர். பொதுமக்கள் வருவதைக் கண்ட அப்துல் வகாப் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

உடனடியாக அந்தப் பெண் சுத்தமல்லி காவல் நிலையத்தில் அப்துல் வகாப் மீது புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், அப்துல் வகாப் இதேபோல் சுமார் 8 பெண்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்திருப்பது தெரியவந்தது. மேலும், சமூக அவமானம் காரணமாக பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் அளிக்காமல் அமைதி காத்ததும் தெரியவந்தது.

அதிரடி கைது

இதனையடுத்து, சுத்தமல்லி போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அப்துல் வகாபை நேற்று (செப்.9) இரவு அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சில பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதியளித்துள்ளனர்.