தமிழ்நாடு

கரூர் சம்பவம் எதிரொலி: அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணிகளுக்கு புதிதாக வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

கரூர் சம்பவம் எதிரொலி: அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!
Political rallies allowed with conditions
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசார கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாகத் தமிழக அரசு இன்று முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இது தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், ரகுபதி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

அனைத்துக் கட்சிகளின் கருத்துக்கள்

இந்தக் கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., பா.ஜ.க., உட்பட அங்கீகரிக்கப்பட்ட 20 கட்சிகள் பங்கேற்றன. இதில் சில அரசியல் கட்சிகள், "ரோடு ஷோ" (Road Show) நடத்தக் கூடாது என்றும், அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.

புதிய நிபந்தனைகள்

அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகளுக்குப் பல நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

பொதுக்கூட்டத்தில் சேதங்கள் ஏற்பட்டால் ஈடுசெய்வதற்கு ஏதுவாக, அரசியல் கட்சிகளுக்கு வைப்புத்தொகை (Deposit) வசூலிக்க அரசு முடிவெடுத்துள்ளது. அரசியல் கட்சி கூட்டங்களுக்கு அதிகபட்சம் ரூ.20 லட்சம் வைப்புத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5,000 முதல் 10,000 பேர் வரை கூடினால் ரூ.1 லட்சம் வைப்புத்தொகை நிர்ணயிக்க அரசு முடிவு செய்துள்ளது.

பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டால், வைப்புத்தொகையிலிருந்து ஈடுசெய்யப்படுவதுடன், கூடுதல் சேதங்களுக்குக் கட்சியிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும். பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளை கண்காணிக்கவும், அனுமதி வழங்கவும் ஒரு குழு அமைக்கப்படும். அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்படும்.

மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூட்டத்தில் பாதுகாப்புக்காகப் போலீசாரைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.