தமிழ்நாடு

'சைடிஸ்' தகராறில் கொலை.. ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

காஞ்சிபுரம் அருகே சைடிஸ்' கேட்டு ஏற்பட்ட தகராறில் கார்த்திக் என்பவரைக் கொலை செய்த வழக்கில், சங்கர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

'சைடிஸ்' தகராறில் கொலை..  ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!
Court sentences man to life imprisonment
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் 'சைடிஸ்' கேட்டு ஏற்பட்ட தகராறில் கார்த்திக் என்பவரைக் கொலை செய்த வழக்கில், சங்கர் என்பவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.

'சைடிஸ்' தகராறில் கொலை

கடந்த 2017-ஆம் ஆண்டு, குன்றத்தூரைச் சேர்ந்த கார்த்திக், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் இருந்தார். அப்போது, மதுபோதையில் இருந்த வெல்டிங் சங்கர் மற்றும் அவரது நண்பர்கள், கார்த்திக்கிடம் 'சைடிஸ்' கேட்டு தகராறு செய்தனர். கார்த்திக்கின் நண்பர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி, கார்த்திக்கை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், சங்கர் அவரைப் பின் தொடர்ந்து சென்று, கார்த்திக்கின் முதுகில் டியூப் லைட்டால் அடித்து, அதே டியூப் லைட்டால் அவரது கழுத்தில் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார்.

ஆயுள் தண்டனை- நீதிமன்றம் தீர்ப்பு

இந்தச் சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் கொலை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெல்டிங் சங்கரைக் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று நீதிபதி ப.உ.செம்மல் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினார். கார்த்திக்கைக் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டதால், சங்கர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு, கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை (14 ஆண்டுகள்) மற்றும் ரூ. 1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.