தமிழ்நாடு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்.. அரசு பேருந்து நடத்துனர் கைது!

சேலம் அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பேருந்து நடத்துனர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்.. அரசு பேருந்து நடத்துனர் கைது!
Government bus conductor arrested
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே அரசு டவுன் பேருந்தில் பள்ளிக்குச் சென்ற மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பேருந்து நடத்துனர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் சீண்டல்

எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி இந்த மாணவி தனது தோழிகளுடன் அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்றுள்ளார். அந்தப் பேருந்து ஆவணியூர் பேருந்து நிறுத்தப் பகுதியில் சென்றபோது, பேருந்து கண்டக்டர் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், அருகில் நின்ற மற்ற மாணவிகளிடமும் தொட்டுப் பேசி சீண்டல் செய்துள்ளார்.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது

மாலை பள்ளி முடிந்து மாணவி வீடு திரும்பியதும், நடந்த சம்பவங்கள் குறித்துத் தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) பேபி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அரசுப் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வந்த எடப்பாடி சித்தூரைச் சேர்ந்த சின்னசாமி (45) என்பவர், பேருந்தில் சென்று வரும்போது 7 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் சின்னசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவிகளிடம் அரசுப் பேருந்து நடத்துனர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.