தமிழ்நாடு

திண்டுக்கல் அருகே இளைஞர் படுகொலை.. மேலும் இருவர் கைது!

திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் அருகே இளைஞர் படுகொலை.. மேலும் இருவர் கைது!
Two more arrested in connection with the murder of a youth near Dindigul
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் பால் கறவை தொழிலாளி ராமச்சந்திரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மாமியார் மற்றும் மைத்துனர் என மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைக்கான பின்னணி

வத்தலக்குண்டு அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பால் கறவை தொழிலாளி ராமச்சந்திரன், கணபதிப்பட்டியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் ஆர்த்தியை, குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி கடந்த ஜூன் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆர்த்தியின் தந்தை சந்திரன் குடும்பத்தினர் ராமச்சந்திரன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.

திருமணம் முடிந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு, கோபத்துடன் இருந்த சந்திரன், இருசக்கர வாகனத்தில் பால் கறவை தொழிலுக்குச் சென்ற ராமச்சந்திரனை, கூட்டாத்து அய்யம்பாளையம் என்ற இடத்தில் பெரியார் பாசனக் கால்வாய்ப் பாலத்தில் தடுத்து நிறுத்தி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இந்தச் சம்பவத்தில் நிலக்கோட்டை போலீசார் உடனடியாகச் சந்திரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இருவர் கைது

கொலையான ராமச்சந்திரனின் மனைவி ஆர்த்தி, இந்தக் கொலையில் தொடர்புடைய மேலும் பலரைக் கைது செய்ய வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இதற்கிடையே, ஆர்த்தியின் சகோதரர் ரிவீன், ராமச்சந்திரனுக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீசார், இந்தக் கொலை வழக்கில் மேலும் தொடர்புள்ள ராமச்சந்திரனின் மாமியார் அன்புச்செல்வி மற்றும் மைத்துனர் ரிவீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.