தமிழ்நாடு

சென்னை புறநகர் ரயில்களில் எச்சரிக்கை: விதிகளை மீறினால் தண்டனை!

புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை புறநகர் ரயில்களில் எச்சரிக்கை: விதிகளை மீறினால் தண்டனை!
சென்னை புறநகர் ரயில்களில் எச்சரிக்கை: விதிகளை மீறினால் தண்டனை!
சென்னையின் புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் ஒழுங்கீன செயல்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, இதுகுறித்து ஒரு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகளுக்குச் சேவை அளிக்கும் மின்சார ரயில்களில் சில பயணிகள் செய்யும் விரும்பத் தகாத செயல்கள், சக பயணிகளுக்குப் பெரும் அவதியை ஏற்படுத்துவதாக ரயில்வே அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சென்னை கடற்கரை, சென்ட்ரல் போன்ற முக்கிய ரயில் நிலையங்களிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர் எனப் பல இடங்களுக்கும் மின்சார ரயில்கள் இயங்கி வருகின்றன. காலை 4 மணி முதல் இரவு 12 மணிவரை இயக்கப்படும் இந்த ரயில்களில், அதிகபட்ச போக்குவரத்து நேரங்களான காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அலைமோதும். இத்தகைய சூழலில், சில பயணிகள் ரயிலில் ஏறாத மற்றவர்களுக்காக இருக்கைகளைப் பிடித்து வைப்பது, எதிரில் உள்ள இருக்கைகளில் கால்களை நீட்டி அமர்ந்து சக பயணிகளுக்கு இடையூறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் வந்தன.

இந்தப் புகார்களின் அடிப்படையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ரயிலில் ஏறாத நபர்களுக்கு இருக்கைகளைப் பிடித்து வைப்பது தவறான செயல் என்றும், எதிர் இருக்கைகளில் கால்களை வைத்துக் கொண்டு பயணிப்பது ரயில்வே விதிகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்றும் எச்சரித்துள்ளது.

அசுத்தம் செய்வது, அநாகரிகமாக நடந்துகொள்வது, ரயில் கதவுகளில் நின்று கொண்டு மற்ற பயணிகளுக்கு வழிவிடாமல் இருப்பது போன்ற ஒழுங்கீன செயல்களும் இதில் அடங்கும். இனிமேல், பயணிகள் ரயில் விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யத் தவறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு, பயணிகளுக்கு ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.