தமிழ்நாடு

ஸ்பைஸ்ஜெட் விமானம்: சக்கரம் கழன்றதால் பரபரப்பு - மும்பையில் அவசரகால தரையிறக்கம்!

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சக்கரம் கழன்றதால் மும்பையில் 75 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாகத் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்பைஸ்ஜெட் விமானம்: சக்கரம் கழன்றதால் பரபரப்பு - மும்பையில் அவசரகால தரையிறக்கம்!
ஸ்பைஸ்ஜெட் விமானம்: சக்கரம் கழன்றதால் பரபரப்பு - மும்பையில் அவசரகால தரையிறக்கம்!
குஜராத் மாநிலம் கண்ட்லா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று, வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் தனது வலது புறச் சக்கரத்தை இழந்தது. அதிர்ஷ்டவசமாக, விமானியின் துரித நடவடிக்கையால் மும்பை விமான நிலையத்தில் 75 பயணிகளுடன் விமானம் பாதுகாப்பாக அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

வீடியோ பதிவு செய்த பயணி

பொதுவாக விமானம் புறப்படுவது மற்றும் தரையிறங்குவதைப் பயணிகள் படம்பிடிப்பது வழக்கம். அப்படி, Q400 டர்போபிராப் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் புறப்பட்டபோது, வலதுபுற ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த ஒரு பயணி வீடியோ பதிவு செய்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக விமானத்தின் வலது பக்கத்தில் உள்ள இரண்டு சக்கரங்களில் ஒன்று கழன்று ஓடியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, "சக்கரம் விழுந்துவிட்டது" என அவர் திரும்பத் திரும்பக் கத்தியதால் விமானத்தில் இருந்த அனைவரும் பதற்றம் அடைந்தனர்.

இதையடுத்து, விமானத்தின் கட்டுப்பாட்டை ஏற்ற விமானி, உடனடியாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்குத் தகவல் அளித்தார். உடனடியாக, மும்பை விமான நிலையத்தில் தற்காலிக அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

விமானியின் திறமையான செயல்பாடு

விமானி தனது துரித மற்றும் அனுபவமிக்க செயல்பாட்டால் ஒரு பெரும் விபத்தைத் தவிர்த்தார். விமானி, விமானத்தை இடது பக்கமாகச் சற்றே சாய்த்துத் தரையிறக்கியதால், மொத்த எடையும் இடது பக்க சக்கரத்தின் மீது விழுந்தது. இதனால், விமானம் பாதுகாப்பாகப் பிற்பகல் 3.51 மணிக்குத் தரையிறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

சமீபகாலமாக விமானப் பயணங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பரபரப்பான சம்பவம் பயணிகளிடையே விமான நிறுவனங்களின் பராமரிப்புப் பணிகுறித்து அச்சத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.