தமிழ்நாடு

டாஸ்மாக் முறைகேடு.. 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

டாஸ்மாக் நிறுவன முறைகேடு தொடர்பாக அதன் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறையினர் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் முறைகேடு.. 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
டாஸ்மாக் முறைகேடு.. 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில், மதுபானக் கொள்முதல், அதிகாரிகள் பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இந்த நடவடிக்கைக்கு தடைகோரி, டாஸ்மாக் நிறுவனமும் தமிழ்நாடு அரசும் தொடர்ந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியது. அந்தவகையில் சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குனர் விசாகன், மேலாளர்கள் சங்கீதா - ராமதுரை முருகன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது விசாகனின் வீடு அருகே கிழித்து எறியப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் மதுபானக் கொள்முதல் தொடர்பாக வாட்ஸாப்பில் பகிரப்பட்ட தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 5 மணி நேரம் வரை விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல சூளைமேட்டில் உள்ள SNJ அலுவலக மேலாளர், பெசன்ட் நகர் மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விசாகனை தொடர்ந்து இரண்டாவது நாளாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.