தமிழ்நாடு

கோயில் தேருக்கு தீ வைப்பு: காஞ்சிபுரம் அருகே பதற்றம்.. போலீசார் விசாரணை!

காஞ்சிபுரம் அருகே உள்ள முத்து கொளக்கியம்மன் கோயில் தேருக்கு மர்ம நபர்கள் தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் தேருக்கு தீ வைப்பு: காஞ்சிபுரம் அருகே பதற்றம்.. போலீசார் விசாரணை!
Temple chariot set on fire
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த புத்தகரம் பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்து கொளக்கியம்மன் திருக்கோவிலில், புதிய திருத்தேர் வெள்ளோட்டத்திற்காக தயார் நிலையில் இருந்த நிலையில், மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

43 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான புதிய தேர்

முத்து கொளக்கியம்மன் திருக்கோவிலில் சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பு தேர் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த தேர் நீண்ட ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் சிதலமடைந்துள்ளது. இந்த நிலையில், கிராம மக்கள் ஒருமனதாக முடிவெடுத்து, 2017-ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய தேர் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதில், ரூ.28 லட்சம் மக்கள் பங்களிப்பாக பெறப்பட்டது. அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்று, புதிய தேரின் வெள்ளோட்டம் நேற்று முன்தினம் (செப்.05) நடைபெற இருந்தது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இந்த நிலையில், விசிக-வின் முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த மனுவில், "முத்து கொளக்கியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தீபாராதனையின் போது மட்டும் கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். தேர் வெள்ளோட்டத்தின் போதும் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி வரை தேரை வரவிடாமல் தடுத்து விடுகின்றனர்," என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, "பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். மேலும், தேரின் வெள்ளோட்ட பாதையை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்," என மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

காவல்துறை விசாரணை

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வெள்ளோட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தார்பாய் போட்டு மூடப்பட்டிருந்த புதிய தேருக்கு நேற்று (செப்.6) இரவு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில், தார்பாய் முற்றிலுமாக எரிந்து, தேர் சேதமடைந்துள்ளது. இந்தத் தகவல் அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் குவிந்து வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபாத் காவல்துறையினர், தேருக்குத் தீ வைத்தவர்கள் யார், என்ன காரணம் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.