தமிழ்நாடு

தர்பூசணி விவசாயி தற்கொலை.. அரசு பொறுப்பேற்க விவசாய சங்கம் கோரிக்கை

தர்பூசணி விவசாயி லோகநாதன் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்று ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தர்பூசணி விவசாயி தற்கொலை.. அரசு பொறுப்பேற்க விவசாய சங்கம் கோரிக்கை
Watermelon Farmer Suicide 50 Lakh Compensation Demanded from TN Govt
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே மடையம்பாக்கத்தைச் சேர்ந்த தர்பூசணி விவசாயி லோகநாதன் தற்கொலை செய்துகொண்டதற்கு தமிழ்நாடு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கூறியுள்ளது. அவரது குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசின் உணவுத்துறை உயர் அலுவலர் ஒருவர், தர்பூசணியில் சிவப்பு நிறத்திற்காக ரசாயனம் கலக்கப்படுவதாகவும், ஊசி போடப்படுவதாகவும் தவறான செய்தியைப் பரப்பியதாகத் தெரிவித்துள்ளார். குளிர்பான நிறுவனங்களுடன் கைகோர்த்துக்கொண்டு பரப்பப்பட்ட இந்தச் செய்தியால், தர்பூசணி வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை” என்று அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்கொலை செய்த விவசாயி:

மேலும், “இந்தச் சூழ்நிலையில், ரூ. 4 லட்சம் கடன் பெற்று தர்பூசணி பயிரிட்டிருந்த லோகநாதன், மேற்கண்ட பிரச்சனையால் பழங்களை விற்க முடியாமல் அழுகி வீணாகிவிட்டதாகவும், இதனால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து ஆறுதல் கொடுத்த தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு அரசு ஊழியரால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு இழப்பீடு கொடுக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அன்றே எச்சரித்தோம், ஆனால் தமிழ்நாடு அரசும், அதிகாரிகளும், மாண்புமிகு வேளாண்மை துறை அமைச்சர் M.R.K பன்னீர்செல்வம் அவர்களும் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.”

மற்ற மாநிலங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடு:

”தமிழ்நாடு வேளாண்மை துறை M.R.K. பன்னீர்செல்வம் அவர்களுடைய நிர்வாகத்தால் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்று இருக்கிறது இந்த விவகாரம். கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை, தர்பூசணி விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. மா விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள், தென்னை கடுமையான நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது, இதற்கான எந்த தீர்வையும் தராமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் தராமல், பிரச்சனைகளை தமிழ்நாடு வேளாண்மை துறை வேளாண் கண்காட்சி நடத்தி மடைமாற்றம் செய்து கொண்டிருக்கிறது.

கர்நாடகாவில் மா விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது, ஆந்திராவில் கிலோவுக்கு நான்கு ரூபாய் உற்பத்தி மானியம் வழங்கப்படுகிறது, ஆனால் தமிழ்நாட்டில் அவல நிலை தொடர்கிறது, இந்த அவல நிலையால் தற்கொலை செய்து கொண்ட மடையம்பாக்கம் லோகநாதன் இறப்பிற்கு தமிழ்நாடு அரசும், வேளாண்மை துறை அமைச்சர் M.R.K பன்னீர்செல்வம் ஆகியோரும் காரணமாவார்கள்.

எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக அவரது இறப்பிற்கு பொறுப்பேற்று, அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்திற்கு, ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என ஈசன் முருகசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

(எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதனை புரிந்துகொள்வோம். உதவிக்கு - மன நல ஆலோசனை எண் 104 மற்றும் 14416 என்ற எண்னை அழையுங்கள்)