தமிழ்நாடு

பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல்…இளைஞர் கைது

சூலூர் அருகே பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல் அளித்து கொடூரமாக தாக்கிய இளைஞர் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

 பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல்…இளைஞர் கைது
பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது
கோவை மாவட்டம், சூலூர் தாலுகாவில் உள்ள காடாம்பாடி கிராமத்தில் ஆள் நடமாட்டமற்ற வீட்டில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்து கொடூரமாக தாக்கிய இளைஞர் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் தொல்லை

சூலூர் அருகேயுள்ள சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர், அன்னூர் அருகே சொக்கம்பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த முன்தினம் மதியம், விடுதியிலிருந்து வெளியே வந்த மாணவர், சொக்கம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.

அந்த நபர், மாணவனை சூலூர் அருகே காடாம்பாடி விஐபி நகர் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமற்ற வீட்டிற்கு அழைத்துச்சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு மறுத்த மாணவனை அந்த நபர் மரக்கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மாணவர், ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் அருகிலுள்ள சாலையில் கிடந்துள்ளார்.

இளைஞர் கைது

அந்த வழியாகச் சென்றவர்கள் மாணவனை மீட்டு, சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததுடன், அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

சூலூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஒரு இருசக்கர வாகனத்தில் மாணவனை ஏற்றிச்சென்ற நபர், கோடாங்கி பாளையம் ஆராக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் என்பது தெரியவந்தது.

வழக்குப்பதிவு செய்து விசாரணை

விசாரணையில், அந்த இளைஞர் மாணவனை கருமத்தம்பட்டி வழியாக அழைத்துச்சென்று, சோமனூரில் உள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்தியதாகவும், பின்னர் ஆள் நடமாட்டமற்ற வீட்டிற்கு அழைத்துச்சென்று ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றதாகவும், மாணவர் மறுத்ததால் அவரை மரக்கட்டையால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சூலூர் காவல்துறையினர் அவரை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.