அரசியல்

செந்தில்பாலாஜி மீது விஜய் அரசு குறி... கரூரில் தீவிரமாகும் Horse Trading விசாரணை!

த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரைப் பேர வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் பெயர் அடிபட்டதால் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளது.

செந்தில்பாலாஜி மீது விஜய் அரசு குறி... கரூரில் தீவிரமாகும் Horse Trading விசாரணை!
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க, அக்கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக ஐந்து பேரை போலீஸார் கைது செய்திருப்பது, தி.மு.க. மேலிடத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அடுத்த அதிர்ச்சியாக, இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரின் தம்பி அசோக்குமார் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி, கைது நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருவதும் கரூர் தி.மு.க.வை கலங்க வைத்துள்ளது.

இதுபற்றி கரூர் போலீஸார் தரப்பில் பேசினோம். "தருமபுரி மாவட்டம், பள்ளிப்பட்டியைச் சேர்ந்த இளையராஜா பல் டாக்டராக இருக்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர் காங்கிரஸில் இருந்து அ.தி.மு.கவில் இணைந்தார். கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவரணி செயலாளராக அவர் இருந்த நிலையில், 2026 சட்டசபைத் தேர்தலில் தனக்கு சீட் கிடைக்குமென எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தார். இந்த நிலையில், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. வேட்பாளராக சுகுமார் என்பவர் அறிவிக்கப்பட்டு அவரும் பிரசாரத்திலும் ஈடுபட்டிருந்தார்.

அந்த சூழ்நிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை சென்ற இளையராஜா, த.வெ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அடுத்த நிமிடம் சுகுமாருக்கு பதிலாக ஊத்தங்கரை வேட்பாளராக இளையராஜா அறிவிக்கப்பட்டார். தேர்தலிலும் வென்றார்.

இந்த பின்னணி கொண்ட இவர்தான் கடந்த ஜூன் 29ம் தேதி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 'கருத்துக்கணிப்பு' எனும் பெயரில் யூடியூப் சேனல் நடத்திவரும் திருநாவுக்கரசு தன்னை சந்தித்து, 'தி.மு.க.வில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரவுள்ளனர். அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக நீங்கள் செயல்பட்டால் 35 கோடி ரூபாய் வரை வாங்கித் தருகிறேன். இதுபற்றி வெளியில் சொன்னால், நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பின்விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டினார். ஒரு எம்.எல்.ஏ.வான என்னை மிரட்டி லஞ்சம் கொடுக்க முயற்சி செய்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்புலமாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீஸார், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், திருச்சியைச் சேர்ந்த நரேஷ் கரூரைச் சேர்ந்த ரமேஷ், கார்த்தி ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், கார்த்திக் மற்றும் ரமேஷ் கொடுத்த திட்டபடிதான் பத்துக்கும் மேற்பட்ட த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை இவர்கள் சந்தித்து பேரம் பேசியது தெரியவந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ரமேஷ், மு.க அழகிரியின் ஆதரவாளராக இருந்துகொண்டு கரூரில் ஃபிட்னஸ் சென்டர் வைத்திருக்கிறார். கார்த்திக் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பில் இருக்கிறார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்றப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். இந்த இருவரின் செல்போன்களை ஆராய்ந்தபோது, திருநாவுக்கரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஜிபே செய்தது தெரியவந்தது. மேலும் இவர்களின் செல்போன் தொடர்புகளில், உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் உச்ச நடிகைகள் வரை இருப்பதைப் பார்த்து, போலீஸாரே தலைசுற்றிப் போயிருக்கிறார்கள்.

தொடர் விசாரணையில் நரேஷ், செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமாரை சென்னையில் சந்தித்து பேசியுள்ளார் என்பதும் தெரியவந்திருக்கிறது. அதனால் அசோக்கை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜியிடமும் விசாரணை நடத்த போலீஸார் தீவிரமாக உள்ளார்கள்" என்றார்கள்.

கார்த்திக், ரமேஷ் பற்றி கரூரைச் சேர்ந்த திமுக. மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம், "திருப்பூர் மூலனூரைச் சேர்ந்த கார்த்திக், சில ஆண்டுகளுக்கு முன்பு கரூருக்கு குடிபெயர்ந்து, கோவை ரோட்டில் மெஸ் நடத்தினார். அதே பகுதியில் ஃபிட்னெஸ் சென்டர் வைத்திருந்த ரமேஷுடன் அறிமுகமாக, இருவரும் நண்பராகியுள்ளனர். தொடர்ந்து முந்தைய தி.மு.க. ஆட்சியில் இருவரும் செந்தில்பாலாஜி தம்பி அசோக்கிடம் நெருக்கமாகி, விசுவாசமிக்க சிஷ்யர்களாகிவிட்டனர். இதே வேகத்தில், திருப்பூர் கிழக்கு மா.செ இல.பத்மநாபனுடன் தொழில் பார்ட்னராக சேர்ந்துகொண்டார்கள்.

தமிழகத்தில் இந்த இருவரும் சொல்பவர்களுக்குத்தான் டாஸ்மாக் பார் மற்றும் எஃப்.எல் 2 என்கிற மனமகிழ் மன்ற லைசென்ஸ் கிடைக்கும். திருப்பூர், கரூர் மாவட்டங்களில் இவர்கள் அனுமதி இல்லாமல் காற்றாலை அமைக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொழிலதிபர் மகன் ஒருவரை ஸ்டார் ஓட்டலில் அடைத்து வந்து, கார்த்திக்கும் ரமேஷும் வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்ததாக போலீஸார் வழக்கு பதிந்தார்கள்.

ஆனால், அப்போதைய ஆளுங்கட்சி செல்வாக்கைப் பயன்படுத்தி, ஒரு மணி நேரத்தில் இருவரும் வெளியே வந்துவிட்டனர். அப்போதே, செந்தில்பாலாஜியின் நலம் விரும்பிகள் அவரிடம், 'இந்த இருவரையும் இனிமேல் சேர்க்க வேண்டாம்' என்று எச்சரித்தார்கள்" என சொல்லி முடித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். "செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆளுங்கட்சி தீட்டும் சதித்திட்டம் இது. ஜோடிக்கப்பட்ட வழக்கு. நான் கவர்னரை சந்தித்து எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் பேசி வாங்கும் ஆளுங்கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தேன்.

அந்தப் புகார் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்கிறார் என்று தெரிந்தவுடன், ஆளும்கட்சியினர் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் இதை சட்டரீதியாக சந்திப்போம்" என்றார்.

செந்தில்பாலாஜி மீது விஜய் அரசு வெச்ச குறி பலிக்குமா?