Breaking news

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறை காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
Former Chief Minister Karunanidhi's eldest son passed away
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (ஜூலை 19) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரையுலகப் பயணம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு 1948 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்த மு.க.முத்து, 1970களில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தந்தையின் கலையுலக வாரிசாகக் கருதப்பட்ட இவர், ‘பிள்ளையோ பிள்ளை’, ‘சமையல்காரன்’, ‘அணையாவிளக்கு’, ‘இங்கேயும் மனிதர்கள்’, ‘பூக்காரி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தான் நடித்த படங்களில் சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.

குறிப்பாக, ‘காதலின் பொன் வீதியில்’, ‘மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ’, ‘மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி’ போன்ற பாடல்கள் அவரது நடிப்பில் என்றென்றும் நினைவுகூரப்படுபவை. மேலும், திமுக மேடைகளிலும் கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்களைப் பாடியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு தேவா இசையில் ‘மாட்டுத் தாவணி’ என்ற படத்தில் ஒரு பாடலையும் பாடியிருந்தார்.

உடல்நலக்குறைவு மற்றும் மறைவு

மு.க.முத்து கடந்த 2023 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த மு.க.முத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மு.க.முத்துவின் மறைவையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுக சார்பாக நடக்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.