சினிமா

இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார்.

இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்
Director Velu Prabhakaran passed away
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட வேலு பிரபாகரன் (68) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (ஜூலை 18) சிகிச்சை பலனின்றி காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக வேலு பிரபாகரன் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.

வேலு பிரபாகரன் தனது திரைப்பட வாழ்க்கையை 1980-ல் வெளியான 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகத் தொடங்கினார். பின்னர், 1989-ல் 'நாளைய மனிதன்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, அதன் இரண்டாம் பாகமான 'அதிசய மனிதன்' (1990) படத்தையும் இயக்கி வெற்றி கண்டார்.

அதன் பிறகு 'அசுரன்', 'ராஜாளி' போன்ற படங்களை இயக்கி ஒளிப்பதிவும் செய்தார். நடிகர் அருண் பாண்டியன் நடித்த 'கடவுள்', நெப்போலியன் நடித்த 'சிவன்', சத்யராஜின் 'புரட்சிக்காரன்' போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இருப்பினும், அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், அவர் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

'பதினாறு', 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்', 'கடாவர்', 'பீட்சா 3', 'ரெய்டு', 'கஜானா' உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

தமிழ் திரையுலகில் ஒரு முக்கிய நபராக வலம் வந்த வேலு பிரபாகரனின் மறைவு, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.