இந்தியா

தன்னை தானே கட்டிக்கொண்டு.. கண் கலங்க வைத்த விவசாய தம்பதியினர்!

நிலத்தை உழுவதற்காக தன்னைத்தானே கருவியாக பயன்படுத்திய விவசாயி தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தன்னை தானே கட்டிக்கொண்டு.. கண் கலங்க வைத்த விவசாய தம்பதியினர்!
Farmer Ties himself To Plough - viral video
கடந்த ஜூலை 1 ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் விவசாய தினம் அரசின் சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனால், உண்மையில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்றால் அது மில்லியன் டாலர் கேள்வி.

70 வயதான விவசாயி ஒருவர் தனது வயலை உழுவதற்காக டிராக்டர் மற்றும் எருதுகளுக்குப் பதிலாக தன்னைத்தானே கருவியாக மாற்றிக் கொண்டு நிலத்தை உழுத சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுத் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் பலரும் அந்த விவசாயிக்கு உதவ முன்வந்து உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரின் அகமதுபூர் தாலுகாவில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார். இவரது மனைவி சாந்தபாய் பவார். விவசாயம் தான் இவர்களின் வாழ்வாதாரத்துக்கான ஒரே ஆதாரம். அப்படியிருக்கையில் இவர்களிடம் நிலத்தை உழுவதற்காக மாடுகளோ? டிராக்டரோ? எதுவுமில்லை. இதனால், கலப்பையினை தன் தோளில் இறுகக்கட்டி கொண்டு அம்பதாஸ் முன்னே செல்ல, அவரது மனைவி சாந்தபாய் கலப்பையின் முனையில் ஏறியவாறு நிலத்தை இருவரும் இணைந்து உழது வருகிறார்கள்.

தங்கள் நிலைமை குறித்து அம்பதாஸ் பவார் கூறுகையில், "விவசாயத்தில் எவ்வளவு பணம் முதலீடு செய்தாலும், அதற்கு ஈடாக இன்னும் குறைவாகவே சம்பாதிக்கிறோம். நாங்கள் வங்கியில் ₹40,000 கடன் வாங்கினோம், அதை நாங்கள் ஒவ்வொரு வருடமும் திருப்பிச் செலுத்தி மீண்டும் கடன் பெற்று வருகிறோம். விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் எவ்வளவு குறைவு என்றால், எங்கள் கழுத்து வரை இருக்கும் சோயாபீன்ஸ் மூட்டைகள் ₹4,000 விலைக்கு விற்கின்றன. ஆனால் 25 கிலோ மட்டுமே எடையுள்ள சோயாபீன் விதைகள் கொண்ட ஒரு பை மட்டும் ₹3,000-க்கு விற்கப்படுகிறது.

விவசாய கூலித்தொழிலாளர்களின் சம்பளமும் வெகுவாக அதிகரித்து விட்டது. விதைப்பதற்கு டிராக்டரை பயன்படுத்துவது எங்களுக்கு கட்டுப்படியாகாது. உழவு மேற்கொள்ள மாடுகளை கூட வாங்க முடியாத சூழலில் தான் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.

பெண் விவசாயி சாந்தபாய் கூறுகையில், ”எங்களுக்கு 2.5 ஏக்கர் அளவிலான பகிரப்பட்ட நிலம் உள்ளது. ஆனால் நீர்ப்பாசன வசதி இல்லை. எங்கள் கைகளையும் கால்களையும் பயன்படுத்த முடிந்த வரை, நாங்கள் வயல்களில் வேலை செய்வோம். எங்களுக்கு வேறு வழியில்லை. அரசாங்கம் எங்கள் கடன்களை தள்ளுபடி செய்து, உரங்கள் மற்றும் விதைகளை இலவசமாக வழங்க வேண்டும், ” என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



நவீன யுகத்தில் அறிவியல் ரீதியாக எவ்வளவோ வளர்ச்சிகளை இந்த சமூகம் கண்டுள்ள நிலையில், ஆதி காலத்தில் மனிதர்கள் உழவு பணி மேற்கொண்ட காட்சியினை கண் முன்னே கொண்டு வந்துள்ளார்கள் இந்த தம்பதியினர் என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள். தம்பதியினர் உழவு மேற்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், பாலிவுட் நடிகரான சோனு சூட் இந்த தம்பதியினருக்கு உதவ முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.