இந்தியா

பெங்களுருவில் பள்ளி மாணவன் தற்கொலை.. ‘டெத் நோட்' தொடர் காரணமா?

பெங்களூருவில் 7 ஆம் வகுப்பு மாணவன் 'டெத் நோட்' என்ற அனிமேஷன் தொடரால் ஈர்க்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படடுத்தியுள்ளது.

பெங்களுருவில் பள்ளி மாணவன் தற்கொலை.. ‘டெத் நோட்' தொடர் காரணமா?
7th grade student commits suicide in Bengaluru
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் தற்கொலைக்கு, 'டெத் நோட்' (Death Note) என்ற பிரபல ஜப்பானிய அனிமேஷன் தொடர் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.

தற்கொலைக்குக் காரணம்?

பெங்களுருவில் சி.கே. அச்சுக்கட்டு பகுதியில் வசித்து வந்த அந்த மாணவன், 'டெத் நோட்' என்ற பிரபல ஜப்பானிய அனிமேஷன் தொடரின் தீவிர ரசிகன் என்று தெரியவந்துள்ளது. மாணவனின் அறையை ஆய்வு செய்தபோது, 'டெத் நோட்' தொடரில் உள்ள ஒரு கதாபாத்திரத்தின் ஓவியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்தத் தொடரின் கருப்பொருள்களால் ஈர்க்கப்பட்டு அவன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவனது மொபைல் போன் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, ஆன்லைன் செயல்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

மாணவன் எழுதிய கடிதம்

தற்கொலைக்கு முன், மாணவன் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளான். அதில், "அம்மா, அப்பா, நீங்கள் என்னை 14 வருடங்கள் நன்றாக வளர்த்தீர்கள். நான் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் இன்று நான் வெளியேற வேண்டிய நேரம் இது. நீங்கள் என் கடிதத்தைப் படிக்கும் நேரத்தில், நான் சொர்க்கத்தில் இருப்பேன். இதைப் படிக்கும் போது தயவுசெய்து அழாதீர்கள். மேலும், என் நண்பர்களை நான் மிகவும் நேசித்தேன் என்று அவர்களிடம் கூறுங்கள்" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்..

'டெத் நோட்' தொடர் என்றால் என்ன?

'டெத் நோட்' என்பது ஒரு ஜப்பானிய அனிமேஷன் தொடர் ஆகும். இதில், ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவனுக்கு நரகத்திலிருந்து தவறி பூமியில் விழுந்த ஒரு அமானுஷ்ய நோட்புக் கிடைக்கிறது. அதில் ஒருவரின் பெயரை எழுதினால், அந்த நபர் இறந்துவிடுவார்.

எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).