இந்தியா

ஃபேஸ்புக் காதல் வலையில் சிக்கிய முதியவர்.. ரூ. 9 கோடியை இழந்த அதிர்ச்சி பின்னணி!

ஃபேஸ்புக் காதலில் விழுந்த 80 வயது முதியவர், சுமார் ரூ. 9 கோடி வரை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

ஃபேஸ்புக் காதல் வலையில் சிக்கிய முதியவர்.. ரூ. 9 கோடியை இழந்த அதிர்ச்சி பின்னணி!
Elderly man loses Rs 9 crore after falling into Facebook love trap
ஃபேஸ்புக் காதலில் விழுந்த 80 வயது முதியவர், சுமார் ரூ. 9 கோடி வரை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2025 வரை, அந்த முதியவர் 734 முறை பணத்தை அனுப்பியுள்ளார்.

பெண்களுடன் ஃபேஸ்புக்கில் பழக்கம்

ஏப்ரல் 2023-ல், இந்த முதியவர் ஃபேஸ்புக்கில் 'ஷார்வி' என்ற பெண்ணுடன் பழகத் தொடங்கினார். ஷார்வி, தன்னை விவாகரத்து பெற்றவர் என்றும், பல பிரச்சனைகளைச் சந்திப்பதாகவும் கூறியுள்ளார். குழந்தைகளின் உடல்நலக்குறைவு, நிதிப் பிரச்சனைகள் போன்ற காரணங்களைக் கூறி, முதியவரிடம் பலமுறை பணம் கேட்டுள்ளார். முதியவரும் தொடர்ந்து பணம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இதற்குப் பிறகு, மேலும் சில பெண்கள் இந்த மோசடியில் ஈடுபட்டனர். 'கவிதா' என்ற மற்றொரு பெண், ஆபாசமான செய்திகளை அனுப்பி, நோய்வாய்ப்பட்ட குழந்தைக்குச் சிகிச்சைக்காகப் பணம் கேட்டுள்ளார்.

'ஷார்வியின் சகோதரி' என்று அறிமுகப்படுத்திக்கொண்ட 'தினஸ்' என்பவர், ஷார்வி இறந்துவிட்டதாகவும், மருத்துவச் செலவுகளுக்காகப் பணம் தேவை என்றும் கூறி ஏமாற்றியுள்ளார். முதியவர் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளார். பின்னர், 'ஜாஸ்மின்' என்ற மற்றொரு பெண் உதவி கேட்டு, முதியவரிடம் தொடர்ந்து பணம் பறித்துள்ளார். இவர்கள் அனைவரும் முதியவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

வெளிச்சத்துக்கு வந்த மோசடி

ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2025 வரை, முதியவர் 734 முறை, மொத்தமாக சுமார் ரூ. 8.7 கோடி வரை பணத்தை அனுப்பியுள்ளார். அவரது சேமிப்பு அனைத்தும் தீர்ந்துபோன நிலையில், மகனிடமும் ரூ. 5 லட்சம் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மகன், முழு உண்மையையும் கண்டறிந்துள்ளார்.

மேலும் தான் மோசடி வலையில் சிக்கி ஏமார்ந்து தெரியவந்ததும், முதியவர் அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தில் நான்கு பெண்களின் பெயர்கள் வந்தாலும், அவை அனைத்தும் ஒரே நபரின் அடையாளங்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.