இந்தியா

சைவ பிரியாணியில் எலும்பு.. கூச்சலிட்ட இளைஞர்களுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!

உத்தர பிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் உணவுக்கான பணத்தைச் செலுத்தாமல் இருக்க, சைவ பிரியாணியில் எலும்பை வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைவ பிரியாணியில் எலும்பு.. கூச்சலிட்ட இளைஞர்களுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!
சைவ பிரியாணியில் எலும்பு.. கூச்சலிட்ட இளைஞர்களுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில், இளைஞர்கள் சிலர் உணவகத்தில் உணவுப் பணத்தைச் செலுத்தாமல் இருக்க, சைவ பிரியாணியில் எலும்பைத் திட்டமிட்டு வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் இந்த மோசடி அம்பலமான நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சைவ பிரியாணியில் எலும்பு

கடந்த ஜூலை 31 அன்று இரவு, கான்டான்மென்ட் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சாஸ்திரி சவுக் என்ற இடத்தில் உள்ள 'பிரியாணி பே' உணவகத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. 8 முதல் 10 இளைஞர்கள் கொண்ட ஒரு குழுவினர், சைவ மற்றும் அசைவ பிரியாணிகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். உணவு பரிமாறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவர்களில் ஒருவர் தனது சைவ பிரியாணியில் எலும்பு இருப்பதாகக் கூச்சலிட்டார்.

சிசிடிவியில் சிக்கிய திருட்டு வேலை

உடனே, உணவகத்தின் மேலாளர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாடிக்கையாளர்களைச் சமாதானப்படுத்தி, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.

சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, அந்த இளைஞர்களில் ஒருவர் மற்றொருவரிடம் எலும்பைக் கொடுப்பதும், அதை அவர் யாருக்கும் தெரியாமல் சைவ பிரியாணி தட்டில் வைப்பதும் தெளிவாகத் தெரிந்தது என்று உணவக உரிமையாளர் ரவிகர் சிங் தெரிவித்தார். தனது சமையலறையில், அசைவம் தனியாக சமைக்கப்படுவதால், "கலப்படம்" நடக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

"அவர்கள் சுமார் 5,000-6,000 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பணத்தைச் செலுத்தாமல் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு இந்தச் செயலைச் செய்துள்ளனர்" என்று ரவிகர் சிங் போலீசாரிடம் கூறினார்.

போலீஸ் விசாரணை

“இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார். எனினும், உணவகத்தின் தரப்பில் இருந்து இதுவரை முறையான புகார் எதுவும் அளிக்கப்படாததால், வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.