இந்தியா

சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம்.. மாநிலம் வாரியாக விலை நிலவரம்!

எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் LPG சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்று (ஆகஸ்ட் 1) வணிக ரீதியான சிலிண்டரின் விலை குறைக்கப்படுவதாக வந்துள்ள அறிவிப்பால் வணிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம்.. மாநிலம் வாரியாக விலை நிலவரம்!
Commercial LPG Cylinder Prices Slashed; No Change for Domestic Cylinders
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 19 கிலோ கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விலை மாற்றம் ஆகஸ்ட் 1-ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.33.50 வரை குறைந்துள்ளது.

அதே நேரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் உள்நாட்டு 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. விலை மாற்றத்தின் அடிப்படையில் முக்கிய நகரங்களில் விற்கப்படும் சிலிண்டரின் விலை பின்வருமாறு-

கமர்சியல் சிலிண்டரின் விலை மாநிலம் வாரியாக:

வர்த்தக கேஸ் சிலிண்டர் விலையில் ஒவ்வொரு நகரிலும் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று முதல் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1,665.00 லிருந்து ரூ.1,631.50 ஆகக் குறைந்துள்ளது. கொல்கத்தாவில் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,769.00 லிருந்து ரூ.1,735.50 ஆகக் குறைந்துள்ளது. மும்பையில், விலை ரூ.1,616.50 லிருந்து ரூ.1,583.00 ஆகவும், சென்னையில் ரூ.1,823.50 லிருந்து ரூ.1,790.00 ஆகவும் குறைந்துள்ளது.

இந்த ஆண்டில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டில் மட்டும் 7 வது முறையாக வணிக சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மட்டும் வணிக சிலிண்டரின் விலை அதிகரித்தது. மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை தொடர்ச்சியாக வணிக சிலிண்டரின் விலையானது குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை என்ன?

14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதன் விலையில் கடைசியாக ஏப்ரல் மாதத்தில் ரூ.50 உயர்த்தப்பட்டன. அதன்பின் தற்போது வரை, எவ்வித விலை மாற்றமுமின்றி சிலிண்டர் விற்பனையாகி வருகிறது. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையானது டெல்லியில் ரூ.853.00, கொல்கத்தாவில் ரூ.879.00, மும்பையில் ரூ.852.50 மற்றும் சென்னையில் ரூ.868.50 என்கிற விலையில் கிடைக்கிறது.

மாநில அரசு விதிக்கும் வரிகள் காரணமாக உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடுகிறது. விலை நிர்ணயம் அந்நிய செலாவணி விகிதங்கள், கச்சா எண்ணெய் விலை போன்ற பல காரணிகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.