இந்தியா

விமானக் கட்டணத்தைத் திருப்பித் தர இண்டிகோவுக்கு காலக்கெடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணங்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

விமானக் கட்டணத்தைத் திருப்பித் தர இண்டிகோவுக்கு காலக்கெடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
Deadline for IndiGo to refund flight fares
விமானப் பணி ஊழியர்களுக்கான புதிய பணி நேர விதிகள் காரணமாக, இண்டிகோ (IndiGo) விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய கட்டணத்தை நாளை (டிசம்பர் 7) இரவு 8 மணிக்குள் தாமதமின்றித் திருப்பித் தர வேண்டும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விமானச் சேவைப் பாதிப்பும் பயணிகளின் போராட்டமும்

விமானப் பணி ஊழியர்களுக்கான பணி நேரம் உள்ளிட்ட புதிய விதிகள் காரணமாக, இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நேற்றைய தினம் (டிசம்பர் 5) மட்டும் 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எந்த மாற்று ஏற்பாடுகளையும் விமான நிறுவனம் செய்து தராததால், நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் இண்டிகோ பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசமானதால், விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியது. புதிய விதிகளை விமானப் போக்குவரத்து ஆணையரகம் திரும்பப் பெற்றுவிட்டபோதிலும், இன்றும் (டிசம்பர் 6) 500-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகளின் ரத்து தொடர்கிறது.

மத்திய அமைச்சகத்தின் அதிரடி உத்தரவுகள்

இந்தச் சூழலில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: நிலுவையில் உள்ள அனைத்துப் பயணிகளின் பணத்தையும் தாமதமின்றி வழங்க, டிசம்பர் 7, 2025 அன்று இரவு 8 மணிக்குள் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் பணியை முடிக்க இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மறு அட்டவணை கட்டணங்களை வசூலிக்க வேண்டாம் என்றும் விமான நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டணக் கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை

தற்போதைய கட்டண விலையேற்றங்களில் இருந்து பயணிகளைக் காக்க, பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய அமைச்சகம் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பயணிகளைப் பாதுகாக்க, குறிப்பாக அவசரப் பயணம் மேற்கொள்ள உள்ளவர்களுக்காகக் கடுமையான கட்டண வரம்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சரக்குகளின் உரிய முகவரிகளைக் கண்டறிந்து 48 மணி நேரத்திற்குள் வீட்டிற்கு டெலிவரி செய்ய வேண்டும் என்றும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிப் பயணிகள் மற்றும் அவசரப் பயணம் தேவைப்படுபவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் எந்தவொரு இணக்கமில்லாத செயல்களும் ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும், பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை மீறினால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.