இந்தியா

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன், டெல்லி மருத்துவமனையில் இன்று காலமானார்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்!
Former Jharkhand Chief Minister Shibu Soren passed away
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் இணை நிறுவனருமான ஷிபு சோரன் (வயது 81), டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை 8:56 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஷிபு சோரன் - ஒரு பார்வை

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான ஷிபு சோரன், 38 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார். இவர் 3 முறை ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஜார்க்கண்ட் அரசியலின் முக்கிய முகமாக அறியப்படும் ஷிபு சோரன், தற்போது ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்து வரும் ஹேமந்த் சோரனின் தந்தை ஆவார். சமீபத்திய ஆண்டுகளில் அவர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

சிகிச்சையும் மறைவும்

ஷிபு சோரன் சிறுநீரகப் பாதிப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார். 81 வயதான அவருக்கு உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த ஜூன் மாத டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல்

மறைந்த ஷிபு சோரனின் மகனும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "மதிப்பிற்குரிய குரு நம் அனைவரையும் விட்டுச் சென்றுவிட்டார். இன்று, எனக்குப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.