இந்தியா

கர்நாடகாவில் பயங்கரம்.. காதலியின் வாயில் வெடிபொருளை வைத்து கொடூர கொலை!

மைசூரில் திருமணமான பெண் ஒருவர் தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பயங்கரம்.. காதலியின் வாயில் வெடிபொருளை வைத்து கொடூர கொலை!
Brutal murder by putting explosives in girlfriend's mouth
கர்நாடகா மாநிலம், மைசூரில் திருமணமான பெண் ஒருவர் அவரது காதலனால் வெடிபொருள் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலனுடன் ஏற்பட்ட தகராறு

கேரளாவைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளி ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட ரக்ஷிதா (20) என்ற பெண், தனது உறவினரான சித்தராஜுவுடன் (30) திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இந்த உறவு குறித்து அப்பகுதியினருக்குத் தெரியவந்ததால், இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி பெர்யா கிராமத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

அவர்கள் அங்கு தங்கியிருந்தபோது, இருவருக்கும் இடையே திடீரென கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சித்தராஜு கொடூரமான முடிவை எடுத்துள்ளார்.

கொடூர கொலை

சண்டையின் உச்சத்தில், சித்தராஜு தனது காதலி ரக்ஷிதாவின் வாயில் வெடிபொருள் ஒன்றை வைத்து, குவாரிகளில் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்கச் செய்யப் பயன்படுத்தப்படும் கருவியின் உதவியுடன் அதை வெடிக்கச் செய்துள்ளார். இதில், அப்பெண்ணின் முகத்தின் கீழ்ப்பகுதி முற்றிலும் சிதைந்து, படுக்கையிலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.

நாடகமாடிய காதலன்

இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, சித்தராஜு அந்த அறையை விட்டு வெளியே வந்து, "ஒரு மொபைல் போன் வெடித்துச் சிதறியதால் ரக்ஷிதா உயிரிழந்துவிட்டார்" என்று நாடகமாடி மக்களை ஏமாற்ற முயன்றுள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது, அவரது சந்தேகத்திற்குரிய நடவடிக்கையால் பொதுமக்கள் அவரைத் துரத்திப் பிடித்துள்ளனர்.

பின்னர், விடுதி அறையில் ரக்ஷிதாவின் உடலைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாலிகிராம காவல்துறை, ரக்ஷிதாவின் உடலை மீட்டு, சித்தராஜுவைக் கைது செய்து காவலில் எடுத்தது. இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும், வேறு யாரேனும் இந்த கொலையில் சம்மந்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.