இந்தியா

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி அதிரடி

மற்றவர்களை விமர்சனம் செய்வதில் நமது ஆற்றலை வீணாக்கக்கூடாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி அதிரடி
பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்
நாட்டின் 79வது சுதந்திர தின இன்று( ஆக.15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் மரியாதையை பிரதமர் நரேந்திரமோடி ஏற்றுக்கொண்டார்.

கனவுகளை நனவாக்குவோம்

பின்னர் செங்கோட்டையில் 12வது முறையாகத் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ சுதந்திர தின விழாவானது 140 கோடி மக்களின் கொண்டாட்டம். இந்திய மக்கள் அனைவரும் பெருமையுடன் கொண்டாடும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. சுதந்திர தின நன்நாளில் நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்குவோம். தாய் மண்ணின் பெருமையைக் காக்க இந்தியர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.வளர்ந்த பாரதத்தை கட்டமைக்க நாம் கடினமாக உழைக்க இந்நாள் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கட்டும் என்றார்.

கற்பனையில் எட்டாத தண்டனை

நமது நாட்டில் 75 ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் கலங்கரை விளக்கம்போல நமக்குப் பாதையைக் காட்டி வருகிறது. நாட்டுக்கு வழிகாட்டும் அரசியலைப்புச் சட்டத்தை இயற்றியவர்களுக்கு எனது அஞ்சலியைச் செங்கோட்டையிலிருந்து செலுத்துகிறேன்.லட்சக்கணக்கான வீரர்களின் தியாகத்தால் நம் தேசம் விடுதலை பெற்றது. அதேபோல் இந்திய விடுதலை போராட்டத்தின் பெண்களின் பங்கு இன்றியமையாதது.மூவர்ணக்கொடி என்பது வெறும் கொடி அல்ல, அது நம் நாட்டின் பெருமை. வளர்ந்த பாரதத்தை கட்டமைக்க நாம் கடினமாக உழைக்க இந்நாள் நம்மை ஊக்குவிக்கட்டும்.

கடந்த சில நாட்களாக இயற்கை பேரழிவுகள், நிலச்சரிவுகள், மேக வெடிப்புகள் மற்றும் பல பேரிடர்களை நாம் சந்தித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது அனுதாபங்கள், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப்பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகளில் மாநில அரசுகளும் மத்திய அரசும் முழு பலத்துடன் இணைந்து செயல்படுகின்றன.ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்குக் கற்பனையில் எட்டாத தண்டனை அளித்திருக்கும் நமது ஹீரோக்களுக்கு வணக்கத்தைச் செலுத்திக்கொள்கிறேன்.

இந்திய விவசாயிகளுக்கு சொந்தமானது

எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகளின் பஹல்காமில் மக்களின் மதத்தைக் கேட்டுக் கொன்றார்கள். இந்தப் படுகொலைகளால் முழு உலகமும் அதிர்ச்சி அடைந்தது. ஆப்ரேஷன் சிந்தூர் என்பது இந்தச் சம்பவத்திற்கான பதிலடியாக அமைந்தது. இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்தோம். பல தசாப்தங்களாகச் செய்ய முடியாததை நமது வீரர்கள் செய்தனர். பாகிஸ்தானின் பயங்கரவாத தலைமையகத்தைத் தரைமட்டமாக்கினர்.

ரத்தமும், தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என இந்தியா தீர்மானித்தது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் எவ்வளவு அநீதியானது மற்றும் ஒருதலைபட்சமானது என்பதை நம் நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் உருவாகும் ஆறுகளின் நீர் நமது எதிரிகளின் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்து வருகிறது. ஆனால் நமது விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தாகத்தில் உள்ளனர். இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சிந்து நதிநீர் மீதான உரிமை இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே சொந்தமானது. நீர் பங்கீடு விவகாரத்தில் எந்த விதமான சமரசத்திற்கு இடமில்லை. மேலும் அணு ஆயுத மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா அடிப்பணியாது.

செமி கண்டக்டர் சிப் உற்பத்தி

இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைமின் கடத்தி சந்தைக்கு வர உள்ளது. நமது போர் விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட என்ஜின்களை உருவாக்க வேண்டும் எனப் பொறியியல் வல்லுநர்களையும் இளம் விஞ்ஞானிகளையும் கேட்டுக்கொள்கிறேன். சுதந்திரத்திற்கு பின்னர் வறுமை என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. தற்போது அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்.

சுயசார்பு இந்தியாவே வளர்ந்த இந்தியாவின் அடிப்படையாகும். கடந்த தலைமுறை சுதந்திரத்திற்காகப் போராடியது, இந்தத் தலைமுறை சுயசார்ப்புக்கு போராட வேண்டும். தற்சார்பே இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக்கும் கருவி. டாலர், பவுண்டகளை சார்ந்திருப்பது தற்சார்ப்பு அல்ல.40 ஆண்டுக்கு முன்பு செமி கண்டக்டர் தொழில்நுட்பம்குறித்து விவாதிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டதது. தற்போது செமி கண்டக்டர் ஆலை நிறுவப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையில் உள்ளோம். நடப்பாண்டு இறுதிக்குள் செமி கண்டக்டர் ஆலை அமைக்கப்பட்டு செமி கண்டக்டர் சிப் உற்பத்தி செய்யப்படும்.

உலக அளவில் ஆதிக்கம்

அணுசக்தி துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது, நாட்டில் பல புதிய அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. விண்வெளித்துறையில் இந்திய இளைஞர்களின் பங்கு அளப்பரியது. இதுவரை இல்லாத வகையில் விண்வெளி துறையில் 300 ஸ்டார்ட் அப்நிறுவனங்கள் இயங்குகின்றன.இந்திய இளைஞர்களின் ஆற்றலில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். கனிம வளத்துறையில் தற்சார்பு என்ற இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அதேபோல் நமது நாட்டு டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலிகள் உலக அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்தியாவில் தயாரித்த தடுப்பு மருந்தால் கொரோனாவிலிருந்து பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. அனைத்து துறைகளிலும் தற்சார்பு என்பதே உண்மையான சுதந்திரம். உர உற்பத்தியை நமது நாட்டிலேயே மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டு உரங்களால் மண்ணின் தன்மை பாதிப்பு. இது தொழில்நுட்பங்களின் காலம், நாம் எதற்காகத் தொழில்நுட்பத்திற்காகப் பிறரை சார்ந்து நிற்க வேண்டும்.

அரசு துணை நிற்கும்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே அனைவரும் பயன்படுத்த வேண்டும். அதுவே நமது பெருமை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாம் பெருமிதத்துடன் பயன்படுத்த வேண்டும். இந்திய பொருட்களுக்குச் சர்வதேச சந்தையில் நல்ல மதிப்பு உள்ளதால் நல்ல தரத்துடன் குறைந்த விலையில் பொருட்களைத் தயாரிக்க வேண்டும். இளைஞர்களின் கனவு பெரிதாக இருக்க வேண்டும். அவர்களுக்கு அரசு துணை நிற்கும். இளைஞர்கள் புதிய திட்டங்களுடன் வர வேண்டும்.

அதேபோல் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் நடுத்தர மக்கள் பயனடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்களால் நமது விவசாயிகள் உலக அளவில் சாதனை புரிகின்றனர். உலக அளவில் பருப்பு உற்பத்தியில் முதலிடம், அரிசி, கோதுமை உற்பத்தியில் 2ஆம் இடம், மீன் உற்பத்தியில் இந்தியா 3ஆம் இடத்தில் உள்ளது” எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.