இந்தியா

டிரம்பை விமர்சித்து பதிவு.. கடுகடுத்த பாஜக தலைமை: மன்னிப்புக் கேட்ட நடிகை

புகழ்பெற்ற பாலிவுட் நடிகையும், பாஜகவினை சேர்ந்த எம்.பி-யுமான கங்கனா ரனாவத் டிரம்ப் குறித்த பதிவிட்ட பதிவினை பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் கீழ் நீக்கியுள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

டிரம்பை விமர்சித்து பதிவு.. கடுகடுத்த பாஜக தலைமை: மன்னிப்புக் கேட்ட நடிகை
Kangana Ranaut deletes her post regarding Trump motives
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில், உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது சொல்லப்படாத வர்த்தகப் போரை உருவாக்கியது. அதிலும், ”இந்தியா நமக்கு நல்ல நட்பு நாடு தான். இருந்தாலும் அதிகமாக வரி விதிக்கிறார்கள்” என டிரம்ப் குறிப்பிட்டு பேசியது இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தை கேள்விக்குறியாக்கியது.

இந்தியாவில் முதலீடு வேண்டாம்: டிரம்ப்

இந்நிலையில், கத்தார் தலைநகர் டோகாவில் நடைப்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ”ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உடன் சிறிய பிரச்சினை குறித்து பேசினேன். நான் அவரிடம், 'நண்பரே, உங்களை நாங்கள் நல்ல முறையில் தான் டீல் செய்து வருகிறோம். நீங்கள் 500 பில்லியன் டாலர் முதலீட்டை அமெரிக்காவில் செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள். ஆனால் இப்போது நீங்கள் இந்தியா முழுவதும் உற்பத்தி தொழிற்சாலைகளை கட்டி வருகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். இந்தியாவில் உற்பத்தி செய்வதில் எனக்கு விரும்பவில்லை' என்று சொன்னேன்", என குறிப்பிட்டார்.

மேலும், "இந்தியா உலகின் மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாகும். எனவே, அங்கு பொருட்களை விற்பது மிகக் கடினம். சீனாவில் நீங்கள் பல ஆண்டுகளாக கட்டிய தொழிற்சாலைகளைப் பொறுத்துக்கொண்டோம். இப்போது இந்தியாவில் தொழிற்சாலைகள் கட்டுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்தியா நல்ல நிலையில் தான் உள்ளது. இந்தியா தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும் என்றும் டிம் குக்கிடம் சொன்னேன்" என டிரம்ப் கூறினார்.

சர்சையினை கிளப்பிய கங்கனா பதிவு:

இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் வைரலாகியது. இதற்கிடையில் பாலிவுட் நடிகையும், பாஜகவினை சேர்ந்த எம்.பி-யுமான கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தளத்தில் டிரம்ப்பையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு பதிவு ஒன்றினை பதிவிட்டு இருந்தது சர்ச்சையினை கிளப்பியது.



தனது பதிவில்,

” 1) அவர் (டிரம்ப்) அமெரிக்க ஜனாதிபதி, ஆனால் உலகின் மிகவும் விரும்பப்படும் தலைவர் இந்திய பிரதமர்.
2) டிரம்பின் இரண்டாவது முறையாக அதிபர்.. ஆனால் மூன்றாவது முறையாக இந்திய பிரதமர்.
3) சந்தேகத்திற்கு இடமின்றி டிரம்ப் alpha male.. ஆனால் நமது பிரதமர் ஆல்பா ஆண் கா பாப்.(இந்தியில் குறிப்பிட்டுள்ளார்)
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது தனிப்பட்ட பொறாமையா அல்லது இராஜதந்திர பாதுகாப்பின்மையா? “ என குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவு கடும் சர்ச்சைகளை கிளப்பியது.

பதிவை நீக்கிய கங்கனா:

பதிவிட்ட சில மணி நேரத்திற்குள்ளாக அந்த பதிவினை கங்கனா ரனாவத் நீக்கினார். அதற்கு விளக்கமளிக்கும் வகையில் மற்றொரு பதிவில், “மதிப்பிற்குரிய தேசியத் தலைவர் ஸ்ரீ @JPNadda ஜி என்னை அழைத்து, ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டாம் என்று டிரம்ப் கேட்டுக் கொண்டது குறித்து நான் பதிவிட்ட ட்வீட்டை நீக்கச் சொன்னார். என்னுடைய அந்த தனிப்பட்ட கருத்தைப் பதிவிட்டதற்கு நான் வருந்துகிறேன். தலைவரது அறிவுறுத்தல்களின்படி, அதை உடனடியாக இன்ஸ்டாகிராமிலிருந்தும் நீக்கிவிட்டேன். நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே இந்தியா-பாகிஸ்தான் போர் சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தது நான் தான் என டிரம்ப் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்க முடியாமல் பாஜகவினர் திணறி வரும் நிலையில், கங்கனா ரனாவத்தின் பதிவும், நீக்கமும் பாஜகவை மேலும் விமர்சிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.