இந்தியா

அப்பாவி மக்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்களில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்திய ராணுவம் பதிலடி

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் இந்திய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 2 இளைஞர்களை சமீபத்தில் கைது செய்தது.

மேலும் ஒரு இளைஞர் விசாரணைக்கு பயந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று முன் தினம் நள்ளிரவு 1 மணியளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொறுமையை சோதிக்க வேண்டாம்

இந்த தாக்குதலுக்கு இந்திய தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து நேற்று இரவு பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரத்தை நோக்கி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. முன்னெச்சரிக்கையாக இருந்த இந்திய ராணுவம் அதை முறியடித்துள்ளது. இருப்பினும் அத்துமீறி ஜம்மு காஷ்மீரில் உள்ள சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து பேசியுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய துல்லியமான தாக்குதல்களுக்கு பாராட்டுக்கள். இந்தியா பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டுள்ளது, ஆனால் பொறுமையை தவறாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

ராணுவ வீரர்களுக்கு பாராட்டு

மேலும், இந்தியாவின் இராணுவ இலக்குகளைத் தாக்க பாகிஸ்தான் முயன்றதைத் தொடர்ந்து எங்களுக்கு பொறுமையை சோதிக்காதீர்கள், ஆப்ரேஷன் சிந்தூர் போன்று தக்க பதிலடி கொடுப்போம் என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் முடிந்துவிடவில்லை. தொடரும் என தெரிவித்துள்ளார்.

இந்தியா அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொதுமக்களை பாதிக்காத வகையில் தாக்குதல் நடத்தியுள்ளோம்.இந்தியாவின் தரத்தையும், அதன் மீதான நம்பிக்கையையும் பாதுகாப்புப் படைகள் நிரூபித்துள்ளன. பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்திய ராணுவ வீரர், வீராங்கனைகள் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தார். மேலும், பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கூடபாதிக்கப்படவில்லை. இத்தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.