இந்தியா

ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு...உற்சாகமுடன் வந்த மாணவர்கள்

எல்லையில் அமைதித் திரும்பியுள்ளதால் ரியாசியில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

 ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு...உற்சாகமுடன் வந்த மாணவர்கள்
ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசியில் பள்ளிகள் திறப்பு

இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு எல்லையில் மீண்டும் அமைதி நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

வீடுகளுக்கு திரும்பும் மக்கள்

சமீபத்தில் பாகிஸ்தான் அத்துமீறி ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லையோர கிராங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் தாக்குதலில் ஜம்மு காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்கள் 20 பேர் பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் குண்டுவீச்சால் வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பலாம் என அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் அறிவுறுத்தல் மற்றும் எல்லையில் மீண்டும் திரும்பியுள்ள அமைதியான சூழல் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

பள்ளிகள் திறப்பு

இந்த நிலையில், எல்லையில் அமைதித் திரும்பியுள்ளதால் ரியாசியில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். இதனால் ரியாசியில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.