இந்தியா

தினசரி 10,000 பேர்.. தமிழ்நாடு இரண்டாவது இடம்: நாய்கடி தொடர்பான ஷாக் ரிப்போர்ட்!

நாளொன்றுக்கு 10,000-க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வெளியாகியுள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினசரி 10,000 பேர்.. தமிழ்நாடு இரண்டாவது இடம்: நாய்கடி தொடர்பான ஷாக் ரிப்போர்ட்!
Over 10,000 People Get Bitten by Dogs Every Day in India
சில தினங்களுக்கு முன்னர் அதிகரித்து வரும் தெரு நாய்கடி சம்பவங்கள் தொடர்பாக தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அடங்கிய அமர்வு, டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு அனைத்து பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை உடனடியாக அகற்றி தங்குமிடங்களுக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது.

இந்த உத்தரவு நொய்டா, குருகிராம் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்தனர். இந்த பணியினை மேற்கொள்ள 8 வாரக்காலம் அவகாசம் வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், மற்றொரு தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அடங்குவார். உச்சநீதிமன்ற உத்தரவானது கொடூரமானது என விமர்சித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவு, எதிர்ப்பு என்கிற குரல்கள் ஒருசேர எழுந்து வரும் நிலையில் நாய்கடி தொடர்பான புள்ளிவிவரங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய் கடி: உலகளவில் இந்தியாவின் நிலை

இந்தியாவில் நாய் கடி விவகாரம் ஒரு தீவிரமான பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தினமும் 10,000-க்கும் மேற்பட்டோர் நாய்கடிக்கு உள்ளாகின்றனர். இது அதிகாரபூர்வமான புள்ளிவிவரம் மட்டுமே, உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அரசாங்க மற்றும் உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகள் அடிப்படையில் நாய் கடி மற்றும் வெறிநாய்க்கடியினால் உண்டாகும் ரேபிஸ் (rabies) தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை போன்றவற்றில் உலகளவில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது.

நாய் கடி வழக்குகள்:

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நாய் கடி வழக்குகளின் எண்ணிக்கை இந்தியாவில் பெருமளவு குறைந்துள்ளது.

* 2018: 75.7 லட்சம் வழக்குகள்
* 2019: 72.8 லட்சம் வழக்குகள்
*2020: 46.3 லட்சம் வழக்குகள்
* 2021: 17 லட்சம் வழக்குகள்

ஆனால், பெருந்தொற்றுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது.

* 2022: 21.9 லட்சம் வழக்குகள்
* 2023: 30.5 லட்சம் வழக்குகள்
* 2024: 37.2 லட்சம் வழக்குகள் (தோரயமான எண்ணிக்கை)

பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாகவே நாய்கடி சம்பவங்கள் குறைந்துள்ளன. இயல்பு வாழ்க்கை திரும்பியவுடன், அதன் எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை நோக்கிச் செல்கிறது.

மாநில வாரியான புள்ளி நிலவரம்:

இந்தியாவில் சில மாநிலங்கள் நாய் கடிப் பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் 2022 முதல் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில் பதிவானவை என்பது குறிப்பிடத்தக்கது.

--> மகாராஷ்டிரா: 13.5 லட்சம் வழக்குகள்
--> தமிழ்நாடு: 12.9 லட்சம் வழக்குகள்
--> குஜராத்: 8.4 லட்சம் வழக்குகள்
--> கர்நாடகா: 7.6 லட்சம் வழக்குகள்
--> ஆந்திரப் பிரதேசம்: 6.5 லட்சம் வழக்குகள்

தெருநாய்கள் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் உத்தரப்பிரதேசத்தினை தொடர்ந்து ஒடிசா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

ரேபிஸ் தொற்று மரணங்கள்: இந்தியா முதலிடம்

ஒருபுறம் நாய்கடியின் எண்ணிக்கை அச்சுறுத்தினால், மறுபுறம் வெறிநாய்கடியினால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் தான் அதிகம் என்கிறது ரிப்போர்ட். கால்நடைத்துறை மற்றும் உலக சுகாதார அமைப்பின் தகவலின் அடிப்படையில், இந்தியாவில் 305 பேர் ரேபிஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக சீனாவில் 157 நபர்களும், மியான்மரில் 55 நபர்களும், வங்கதேசத்தில் 45 நபர்களும் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது நாய்கடி பேசுப்பொருளாகியுள்ள நிலையில், அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது