இந்தியா

எல்லை மீறிய ரீல்ஸ் மோகம்.. ஓடும் ரயிலில் பயணிகளுக்கு நடுவே வாலிபர் செய்த நூதனச் செயல்!

உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில் குளிப்பது போன்று ரீலிஸ் வெளியிட்ட இளைஞரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

எல்லை மீறிய ரீல்ஸ் மோகம்.. ஓடும் ரயிலில் பயணிகளுக்கு நடுவே வாலிபர் செய்த நூதனச் செயல்!
Man takes bath in corridor of moving train
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் ஓடும் ரயிலின் ஸ்லீப்பர் கோச் பெட்டியின் நடைபாதையில் ஒரு வாலிபர் குளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பரவியது. ரீல்ஸ் வீடியோவுக்காக இந்த நூதனச் செயலில் ஈடுபட்ட அந்த இளைஞர் மீது ரயில்வே நிர்வாகம் சட்ட நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்துள்ளது.

ஓடும் ரயிலில் குளியல்

வீரங்கனா லக்ஷ்மிபாய் ஜான்சி ரயில் நிலையத்தில் நின்றிருந்த ஒரு ரயில் நகர்ந்து கொண்டிருக்கும்போது, ஜான்சி பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர், ஸ்லீப்பர் கோச் பெட்டியின் இருக்கைகளுக்கு அருகேயுள்ள பொது நடைபாதையில் குளித்துள்ளார். வாளியில் தண்ணீர் கொண்டு வந்து குவளை மூலம் தலையில் ஊற்றி, சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி அவர் குளிக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. சக பயணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் குளிக்கும் இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

சமூக வலைதளப் புகழுக்காகச் செய்த செயல்

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வடக்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வாலிபர் ஜான்சி பகுதியைச் சேர்ந்த பிரமோத் ஸ்ரீவாஸ் என்பது தெரிய வந்தது. அவர் சமூக வலைத்தளங்களில் புகழ்பெற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு குளித்து வீடியோ ரீல்ஸ் எடுத்துப் பதிவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை

ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாலும், ரயில்வே சொத்தில் தவறாக நடந்துகொண்டதாலும் அந்த இளைஞரை கைது செய்தது. மேலும், சமூக வலைதளப் புகழுக்காகப் பொதுவெளியில் வரம்புகளை மீறக்கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

"வடக்கு மத்திய ரயில்வே, மற்ற பயணிகளுக்குத் தொந்தரவை ஏற்படுத்தும் இது போன்ற பொருத்தமற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைத்துப் பயணிகளையும் கேட்டுக்கொள்கிறது" என்றும் ரயில்வே நிர்வாகம் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.