இந்தியா

திருடன் ராக்.. ஓனர் ஷாக்: திருடிய வீட்டில் தூங்கிய திருடன்!

உத்தரப் பிரதேசத்தில் திருடிய வீட்டிலேயே தூங்கிய திருடன், கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருடன் ராக்.. ஓனர் ஷாக்: திருடிய வீட்டில் தூங்கிய திருடன்!
Thief Sleeping in the House He Stole
திருடச் சென்ற வீடுகளிலேயே களைப்பில் அயர்ந்து தூங்கிய ஒரு திருடன், மறுநாள் காலை வீட்டு உரிமையாளர்களால் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வீடுகளில் கைவரிசை

கான்பூரில் உள்ள நசிராபாத் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் அனில் குமார் மற்றும் வினோத் குமார் என்ற இரு சகோதரர்கள் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுபோதையில் இருந்த திருடன், முதலில் வினோத் குமாரின் வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்து, பீரோவை உடைத்து நகைகளைத் திருடினான். அதன் பிறகு, பக்கத்து வீட்டில் உள்ள அனில் குமார் வீட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த நகைகளையும் பணத்தையும் திருடினான்.

திருடிய வீட்டிலேயே தூங்கிய திருடன்

இரண்டு வீடுகளில் திருடிய களைப்பில் இருந்த அந்தத் திருடன் அனில் குமார் வீட்டில் உள்ள படுக்கை அறையிலேயே அயர்ந்து தூங்கிவிட்டான். மறுநாள் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து அனில் குமார் எழுந்தபோது, தனது வீட்டில் ஒரு அறிமுகமில்லாத நபர் தூங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே வீட்டைச் சோதித்தபோது, அலமாரி உடைக்கப்பட்டு, பொருட்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டார்.

கையும் களவுமாகப் பிடிபட்ட திருடன்

இதனால் அதிர்ச்சியடைந்த அனில் குமார், தூங்கிக்கொண்டிருந்த திருடனின் பையைச் சோதித்தார். அதில், திருடப்பட்ட நகைகளும் பணமும் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அனில் குமார் அளித்த தகவலின் பேரில், அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு திருடனைத் தாக்கினர். பின்னர், திருடனை நசிராபாத் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் திருடனைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.