இந்தியா

கேக் வெட்டிய 5 நிமிடத்தில் சோகம்.. கட்டடம் இடிந்து குழந்தை உயிரிழப்பு!

மும்பையில் பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு வயது குழந்தையும் அவரது தாயும் கட்டடம் இடிந்த விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேக் வெட்டிய 5 நிமிடத்தில் சோகம்.. கட்டடம் இடிந்து குழந்தை உயிரிழப்பு!
couple was celebrating daughter's birthday. Then, building collapsed
மும்பை விர்ரார் பகுதியில், ஒரு வயது பெண் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடிய ஐந்து நிமிடங்களில் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில், அந்தக் குழந்தை மற்றும் அவரது தாயார் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

மும்பை விர்ரார் பகுதியை சேர்ந்த ஓம்கார் ஜோயல் - ஆரோஹி ஜோயல் தம்பதியின் ஒரு வயது குழந்தையான உத்கர்ஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், கடந்த 27 ஆம் தேதி இரவு நடைபெற்றது. பலூன்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த வீடு, அவர்களின் மகிழ்ச்சியைப் பிரதிபலித்தது. கேக் வெட்டி, அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர்கள், அந்த மகிழ்ச்சியான தருணங்களை உறவினர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

கட்டடம் இடிந்த கோர விபத்து

ஆனால், அவர்களின் மகிழ்ச்சி ஐந்து நிமிடங்களுக்குக்கூட நிலைக்கவில்லை. அதிகாலை 12:05 மணியளவில், விஜய் நகரில் உள்ள ராமபாய் அபார்ட்மெண்ட் என்ற 13 ஆண்டுகள் பழமையான அந்தக் கட்டடத்தின் பின்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த ஜோயல் குடும்பமும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டது.

மீட்புப் பணிகளும் உயிரிழந்தவர்களும்

கட்டட விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும், மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீவிர மீட்புப் பணிகளுக்குப் பிறகு, இடிபாடுகளுக்குள் இருந்து ஆரோஹி ஜோயல் (24) மற்றும் அவரது குழந்தை உத்கர்ஷா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். குழந்தையின் தந்தை ஓம்கார் ஜோயலைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தபோது, அதன் இடிபாடுகள் அருகில் உள்ள மற்றொரு காலி குடியிருப்பின் மீது விழுந்ததால், கூடுதல் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையில் வெளியான தகவல்கள்

இந்த விபத்து குறித்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டடம் 2012-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 50 குடியிருப்புகளைக் கொண்ட இந்தக் கட்டடத்தில், இடிந்து விழுந்த பின்பகுதியில் மட்டும் 12 குடியிருப்புகள் இருந்துள்ளன. இந்த கட்டடம் அங்கீகாரம் இல்லாத ஒன்று என வசாய் விர்ரார் முனிசிபல் கார்ப்பரேஷன் (VVMC) உறுதி செய்துள்ளது.