இந்தியா

Turbaned Tornado: மிக வயதான மாரத்தான் வீரர் காலமானார்..!

உலகின் மிக வயதான மாரத்தான் வீரர் பவுஜா சிங் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

Turbaned Tornado: மிக வயதான மாரத்தான் வீரர் காலமானார்..!
The oldest marathon runner has passed away
உலகின் மிக வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையைப் பெற்ற, ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங், திங்கட்கிழமை அன்று சாலை விபத்தில் தனது 114 வயதில் உயிரிழந்தார்.

Turbaned Tornado (தலைப்பாகை சூறாவளி) என அன்போடு அழைக்கப்படும் இவர், நேற்று மதியம் பஞ்சாபில் உள்ள ஜலந்தர்-பதான் கோட் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது ஒரு கார் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், இரவு 7:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, பவுஜா சிங்கின் உடல், வெளிநாட்டில் வசிக்கும் அவரது மகன் மற்றும் மகள் வரும் வரை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த பின்னரே அவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த பவுஜா சிங்?

ஏப்ரல் 1, 1911 அன்று பிறந்த பவுஜா சிங், தனது 89 வயதில் மாரத்தான் பயணத்தைத் தொடங்கி உலகப் புகழ் பெற்றார். 2011 டொராண்டோ வாட்டர்ஃப்ரண்ட் மாரத்தான் போட்டியை 100 வயதில் முடித்து, முழு மாரத்தான் போட்டியை முடித்த மிக வயதான நபர் என்ற பெருமையைப் பெற்றார்.

அவரது மகன் குல்தீப் மற்றும் அவரது மனைவி இறந்த துயரம், வாழ்க்கையில் ஒரு பயனுள்ள மாற்று வழியைத் தேட தூண்டியதாக பவுஜா சிங் தெரிவித்திருந்தார். பல வயதுப் பிரிவுகளில் சாதனைகளைப் படைத்த பவுஜா சிங், 101 வயது வரை மாரத்தான் ஓட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.