இந்தியா

கணவனை ஆற்றில் தள்ளிய மனைவி.. அதிர்ச்சி வீடியோ

கர்நாடகாவில் செல்ஃபி எடுத்தபோது மனைவி தனது கணவரை ஆற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை ஆற்றில் தள்ளிய மனைவி.. அதிர்ச்சி வீடியோ
Wife pushes husband into river
கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டம், கட்லூர் கிராமத்தில் கிருஷ்ணா நதியின் மீதுள்ள பாலத்திற்கு அருகில், செல்ஃபி எடுக்கும்போது மனைவி தனது கணவரை ஆற்றில் தள்ளிய அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

தடப்பா - சின்னி தம்பதியினர் கிருஷ்ணா ஆற்றின் அருகே சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது தடப்பாவும் அவரது மனைவியும் செல்போனில் சில புகைப்படங்களை எடுத்துள்ளனர். பின்னர், ஒரு செல்ஃபி எடுக்க முயன்றபோது, தடப்பவை மனைவி சின்னி கிருஷ்ணா ஆற்றில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

நல்வாய்ப்பாக தடப்பா நீரில் அடித்து செல்லாமல் ஆற்றில் இருந்த ஒரு பாறையைப் இறுக்கமாக பிடித்துக்கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, கயிறு மூலம் அவரைக் காப்பாற்றியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

மூச்சு விட்டு நிம்மதியடைந்த தடப்பா, தனது மனைவி வேண்டுமென்றே தன்னை ஆற்றில் தள்ளியதாகக் குற்றம் சாட்டினார். சம்பவ இடத்திலேயே கணவன் மனைவி இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் அவர்களைச் சமாதானப்படுத்தி, அவர்களது பெற்றோரை வரவழைத்தனர்.

இறுதியாக, தம்பதியினர் அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் கூறப்படுகிறது. இவர்கள் யாத்கிரின் சிவ்புரா கிராமத்தைச் சேர்ந்த புதிதாகத் திருமணமான தம்பதியினர் என்று கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.