இந்தியா

பிளாஸ்டிக் பைகளில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு.. கர்நாடகாவில் பரபரப்பு!

கர்நாடகாவில் ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் உடல் பாகங்கள் பல பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் பைகளில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு.. கர்நாடகாவில் பரபரப்பு!
Woman's body parts found in plastic bags
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம், கோலாலா கிராமத்தில் சாலையோரம், ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் உடல் பாகங்கள் பல பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தின் முழு விவரங்கள்

கடந்த 7 ஆம் தேதி அன்று, அவ்வழியாகச் சென்றவர்கள் சாலையோரம் கிடந்த ஏழு பிளாஸ்டிக் பைகளைக் கண்டனர். அதில் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக கொரட்டகெரே காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 7 பிளாஸ்டிக் பைகளில் ஒரு பெனின் தலை மற்றும் மற்ற உடல் பாகங்கள் இருப்பதை கண்டனர். இந்தக் கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் கண்டறிய முயற்சி

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், "கொல்லப்பட்ட பெண்ணின் தலையின் உதவியுடன் அவரின் அடையாளத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம். ஆனால், அதை இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. அந்தப் பெண் வேறு எங்கோ ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, இங்கு கொண்டு வந்து வீசப்பட்டிருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த கொலையைச் செய்தவர்கள் காரில் வந்து உடல் பாகங்களைச் சாலையில் வீசிச் சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் வேறு சில உடல் பாகங்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிறப்புப் படைகள் அமைப்பு

இந்த வழக்கை விசாரிப்பதற்காக, தும்கூர் எஸ்.பி. அசோக் கே.வி., சிறப்புப் படைகளை அமைத்துள்ளார். இந்தக் கொலையாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். மேலும், நேற்று அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, சிம்புசணஹள்ளி மற்றும் வெங்கடாபுரா கிராமங்களை இணைக்கும் சாலை முழுவதும் உடல் பாகங்களைத் தேடும் பணி தடைபட்டுள்ளது. இருப்பினும், போலீஸார் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.