அரசியல்

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ஆணையம்.. திருமாவளவன் வரவேற்பு!

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து தனிச் சட்டம் இயற்றப்படும் என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பை திருமாவளவன் வரவேற்றுள்ளார்.

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ஆணையம்.. திருமாவளவன் வரவேற்பு!
CM Stalin and Thirumavalavan
தமிழ்நாட்டில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், இதனை விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்றுள்ளார்.

முதலமைச்சரின் உரை

சட்டப்பேரவையில் இதுகுறித்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பொருந்திய பதவிகள் ஆகியவற்றில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்குவதன் மூலமாகவே யாவரும் ஒருவரே என்ற நிலையை உருவாக்கச் சீர்திருத்த இயக்கங்கள் போராடின என்று குறிப்பிட்டார். அதன் ஒரு பகுதியாக, பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, சமூக நீதி விடுதிகளாகப் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து அவர், "ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் கொண்ட இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளைப் பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். அதன் அடிப்படையில் தனிச்சட்டம் இயற்றப்படும். அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்" என்று உறுதியளித்தார்.

திருமாவளவன் வரவேற்பு

ஆணவக் கொலைகளைத் தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஆணவக் கொலைகளைத் தடுக்கச் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்திருப்பதை வி.சி.க. வரவேற்கிறது. நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டமியற்றப்படுமெனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.