அரசியல்

"பணத்தை வாங்கிட்டு காதில் விசிலை ஊதுங்க"- சேலத்தில் அனல் பறந்த விஜய் பேச்சு!

"தமிழ்நாடு தான் என் வீடு, என் வீட்டில் 8 கோடி பேர் இருக்கிறார்கள்" என்று தன மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


TVK Vijay
த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. நிர்வாகிகள் மத்தியில் பேசிய விஜய், தன்னை விமர்சிப்பவர்களுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் எதிராக அதிரடியான கருத்துகளை முன்வைத்தார்.

விமர்சனங்களுக்குப் பதிலடி

அவர் பேசுகையில், "என்னைப் பற்றி பேசிய அந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கலாமா? ஏ, விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள். அவர்களுக்கு என் வீடு எதுன்னு தெரியுமா? எங்க இருக்குன்னு தெரியுமா? என்னை சீண்டிப் பார்ப்பதாக நினைத்து கேலியும் கிண்டலுமாக பேசுபவர்களுக்குச் சொல்கிறேன். தமிழ்நாடு உங்களுக்கு மாநிலமாக இருக்கலாம், ஆனால் தமிழ்நாடுதான் என் வீடு. என் வீட்டில் 8 கோடி பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் முதல் படை வீரனாக அவர்கள் கூட நிற்க வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள்.

"ஓட்டுக்கு பணம் கொடுத்தால்.."

ஓட்டுக்கு யாரும் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். வாங்கிக்கொண்டு காதில் விசில் ஊதி அனுப்புங்கள். ஆனால், இளம் தலைமுறையினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாசாரம் மாற வேண்டும். பணம் கொடுத்தால் நீங்கள் ஓட்டு போட்டு விடுவீர்களா? நீங்கள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். 'எங்கள் ஓட்டு எங்கள் உரிமை; எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது; எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்குதான்; யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்'. இனி நீங்கள் கொள்ளையடித்த பணம் எல்லாம் குப்பையில்தான் போட வேண்டும்.

மக்களும் ஊழல் ஆட்சியை குப்பையில் போட போகிறார்கள். இளம் தலைமுறையினர் தங்கள் வீட்டில் உள்ளவர்களை விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்லுங்கள். விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வையுங்கள்."

வெறுப்பு அரசியல் செய்ய வரவில்லை

நாங்கள் எந்த கட்சியை ஒழிக்கவோ அழிக்கவோ அரசியலுக்கு வரவில்லை. எந்த கட்சியின் மீதும் தனிப்பட்ட வன்மமோ கோபமோ இல்லை, வெறுப்பு அரசியல் செய்ய நான் அரசியலுக்கு வரவில்லை. அரசியல்ரீதியாக எங்களுக்கு எதிரி யார் என்று அறிவித்து மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்தவே நாங்கள் அரசியலுக்கு வந்திருக்கிறோம். அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று கேட்கிறார்களே... அதிகாரத்தை வைத்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததைத் தாண்டி வேறு எதுவும் அனுபவம் இவர்களுக்கு இருக்கிறதா? அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் இருந்துகொண்டு அரசியல் செய்யும் இவர்களுக்கு எல்லாம் ஒரு சவால்... இவர்களால் சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்கு வாங்க திராணி இருக்கிறதா? எங்களுக்கு அனுபவம் இல்லைதான், கொள்ளையடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லைதான்.

"என்னால் நல்லாட்சி கொடுக்க முடியும்"

நல்லாட்சி கொடுக்க மெத்தப் படித்த மேதாவிகள் தேவைகள் இல்லை. காமராஜர், எம்.ஜி.ஆர் போல என்னால் நல்லாட்சி கொடுக்க முடியும். ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விஷயங்களை வாக்குறுதிகளாக தரமாட்டேன். நம்ம வாக்குறுதிகள் தயாராகிட்டு இருக்கு. தெளிவான தேர்தல் அறிக்கை தயராகி வருகிறது. அது ஏமாற்றம் அளிக்காத வகையில் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.