அரசியல்

ஆணவப் படுகொலை: நடவடிக்கை எடுக்க அரசுக்கு என்ன தயக்கம்? திருமா கேள்வி

நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்றும், சாதி விட்டு சாதி திருமணம் செய்வதற்காகப் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்வதை அவமானமாகக் கருத வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆணவப் படுகொலை: நடவடிக்கை எடுக்க அரசுக்கு என்ன தயக்கம்? திருமா கேள்வி
 VCK President Thirumavalavan Demands National Law Against Honour Killings
திருநெல்வேலி அருகே கடந்த ஜூலை 27 ஆம் தேதி ஐ.டி.ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதன் விவரம் பின்வருமாறு-

நெல்லை கவின் ஆணவப் படுகொலை: திருமாவளவன் கண்டனம்

"நெல்லை மாவட்டம், மென்பொருளாளர் கவின் ஆணவப் படுகொலை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கவினை கொலை செய்த அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால், சுர்ஜித் மற்றும் அவரது தாய், தந்தை ஆகிய மூவர் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, கொலை செய்த சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது. அவரது தாயைக் கைது செய்ய காவல்துறைக்கு என்ன தயக்கம்?" என்று திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

”உடுமலை சங்கர் ஆணவப் படுகொலையில் குடும்பத்தினர் யாரும் நேரடியாகத் தலையிடாமல் கூலிப்படையை ஏவிவிட்டுப் படுகொலை செய்தார்கள். ஆனால், கவுசல்யாவின் தாய், தந்தை, உறவினர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்கள். அதேபோன்ற கோரிக்கையை கவின் பெற்றோர்களும் எழுப்புகிறார்கள். தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் கடமைகளை ஆற்றும் என்று நான் நம்புகிறேன். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள சூழலில், சிபிசிஐடி காவல்துறையினர் நேர்மையாக நடந்து பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் ஆணவக்கொலை அதிகரிப்பது ஏன்?

"இந்த ஆணவப் படுகொலைகள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மட்டுமல்லாமல், வட மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக 10 ஆண்டுகளாக, சாதியவாத சக்திகளும் மதவாத சக்திகளும் சாதிப் பெருமிதத்தை ஒரு அரசியலாக உயர்த்திப் பிடிக்கிறார்கள். சாதிப் பெருமிதத்தின் அடிப்படையில் இதுபோன்ற கொலைகளை ஊக்கப்படுத்தியும் வருகிறார்கள். வட இந்திய மாநிலங்களில்தான் இதுபோன்ற படுகொலைகள் அவ்வப்போது நடக்கும். இப்போது தென்னிந்திய மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில் இது அதிகரித்து வருகிறது. இதற்கு சாதியவாத சக்திகளும் மதவாத சக்திகளும் திட்டமிட்டுப் பரப்புகின்ற சாதிப் பெருமை அரசியல் தான் காரணம்" என்று திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

இதனைத் தடுப்பதற்கு தேசிய அளவில் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கை எனக் கூறிய அவர், "அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஜனநாயக சக்திகள் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்திய ஒன்றிய அரசும் இந்தக் கோரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. மாநில அரசுகளும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. ஒன்றிய அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை இயற்றலாமா? என மாநில அரசுகளிடமிருந்து கருத்து கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதற்குத் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து எந்தக் கருத்தும் சொல்லவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை:

மேலும், உச்ச நீதிமன்றம் மாநில அரசுகள் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஆணவப் கொலைகள் தொடர்பாக சில வழிகாட்டுதல்களைத் தந்திருக்கிறார்கள். எப்படி வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எப்படிப்பட்ட இழப்பீடுகளைத் தர வேண்டும், காவல்துறை அதிகாரிகளின் உடனடி கடமைகள் என்ன என்பன போன்ற வழிகாட்டும் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைக்கூடத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் பின்பற்றவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் திருமாவளவன் கூறினார். இது தொடர்பாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க முயன்றதாகவும், சந்திக்க முடியவில்லை என்றாலும், அவரது அமைச்சகத்தில் இச்சம்பவம் குறித்துக் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

ஆணவக் கொலை என்பது குறிப்பிட்ட தலித் சமூகத்தினருக்கு மட்டும் நடப்பது அல்ல. மாற்றுச் சாதியினரும் சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் ஆணவக் கொலை செய்கிறார்கள். எஸ்.சி./எஸ்.டி. சமூகத்தினரிடையே மட்டுமல்லாமல், ஓ.பி.சி. சமூகத்தினர் இடையேயும் கூட சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் ஆணவப் படுகொலை செய்யக்கூடிய சூழல் இங்கே நிலவி வருகிறது என திருமாவளவன் தெரிவித்தார்.