விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய ஸ்பான்சர்: டிரீம்11-க்கு பதிலாக அப்போலோ டயர்ஸ்!

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தால் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துடன் ₹579 கோடி மதிப்பில் பிசிசிஐ புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய ஸ்பான்சர்: டிரீம்11-க்கு பதிலாக அப்போலோ டயர்ஸ்!
இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய ஸ்பான்சர்: டிரீம்11-க்கு பதிலாக அப்போலோ டயர்ஸ்!
ஆன்லைன் சூதாட்டத் தளமான டிரீம்11 நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மூத்த அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தம், முந்தைய ஒப்பந்தத்தைவிட அதிக மதிப்பு கொண்டது எனக் கூறப்படுகிறது.

மத்திய அரசின் "ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2025 என்ற புதிய சட்டத்தின் கீழ், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்திய அணியின் ஸ்பான்சராக இருந்த டிரீம்11 நிறுவனம் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது. இதன் பின்னர், பிசிசிஐ புதிய ஸ்பான்சருக்கான தேடலைத் தொடங்கியது. அதில், ஆன்லைன் சூதாட்டம், கிரிப்டோகரன்சி, புகையிலை மற்றும் மதுபானங்கள் போன்ற நிறுவனங்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்த ஏலத்தில், அப்போலோ டயர்ஸ் நிறுவனம் ₹579 கோடிக்கு, மூன்று ஆண்டு கால ஒப்பந்தம் செய்துள்ளது. இது, டிரீம்11 நிறுவனத்துடனான முந்தைய ஒப்பந்தத்தின் மதிப்பான ₹358 கோடியைவிட மிகவும் அதிகமாகும். இந்தப் புதிய ஒப்பந்தத்தின் கீழ், இந்திய அணி 121 இருதரப்புப் போட்டிகளிலும், 21 ஐசிசி போட்டிகளிலும் களமிறங்கும். குருக்ராமைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனமான அப்போலோ டயர்ஸ், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.