விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு போதை பழக்கம்? சர்ச்சையில் சிக்கிய ஜடேஜாவின் மனைவி!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று விளையாடும் போது போதைப் பழக்கங்களில் ஈடுபடுவதாக ஜடேஜாவின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு போதை பழக்கம்? சர்ச்சையில் சிக்கிய ஜடேஜாவின் மனைவி!
Jadeja wife embroiled in controversy
இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும், குஜராத் அமைச்சருமான ரிவாபா ஜடேஜா, தன் கணவரைப் புகழ்ந்து பேசியபோது, இந்திய அணி வீரர்கள் பற்றிப் பேசிய கருத்துகள் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளன.

ரிவாபா ஜடேஜா சொன்னது என்ன?

குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிவாபா ஜடேஜா, "என் கணவர் ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட் விளையாட லண்டன், துபாய், ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளுக்குப் போக வேண்டியுள்ளது. அப்படியிருந்தும், இன்றுவரை அவர் எந்த ஒரு போதைக்கும் அடிமையாகவில்லை. ஏனென்றால் அவர் தன் பொறுப்பை உணர்ந்துள்ளார்."

"ஆனால், அணியில் உள்ள மற்ற வீரர்களில் சிலருக்கு போதை மற்றும் தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்கள்தான். ஆனாலும், அவர்களை யாரும் கட்டுப்படுத்துவது இல்லை," என்று ரிவாபா ஜடேஜா பேசினார்.

மேலும், "என் கணவர் 12 வருடங்களாக வீட்டை விட்டுத் தனியே இருக்கிறார்; அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தன் தார்மீகக் கடமையை அவர் புரிந்துகொண்டுள்ளார்" என்றும் அவர் கூறினார்.

சர்ச்சையின் பின்னணி

ரிவாபா ஜடேஜாவின் "மற்ற வீரர்கள் எல்லோரும் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானவர்கள்" என்ற இந்தப் பொதுவான குற்றச்சாட்டு, ஜடேஜாவின் சக வீரர்களை அவதூறாகச் சித்தரிப்பதாகக் கூறி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜடேஜா மற்ற வீரர்களிடம் இருந்து தனது கட்டுப்பாட்டால் வேறுபடுகிறார் என்று அவர் கூற முற்பட்டது விமர்சனத்துக்குள்ளானது.