தமிழ்நாடு

தங்கும் விடுதியில் காதலி தற்கொலை; காதலனும் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்.. நடந்தது என்ன?

காதலி தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தோழிக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பிவிட்டு காதலனும் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கும் விடுதியில் காதலி தற்கொலை; காதலனும் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்.. நடந்தது என்ன?
யில் காதலி தற்கொலை; காதலனும் உயிரை மாய்த்துக்கொண்ட சோ
சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் தங்கும் விடுதி அறையில் காதலி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இந்தத் தகவலை வாட்ஸ்அப் மூலம் தோழிக்கு அனுப்பிவிட்டு, காதலனும் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலும், சோக முடிவும்

சென்னை, அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த திரிஷா (20), திருமங்கலம் விஆர் மாலில் உள்ள ஒரு துணிக்கடையில் பகுதி நேரமாகப் பணிபுரிந்து வந்தார். அதே கடையில் திருவள்ளூர் மாவட்டம், கீச்சலம் பகுதியைச் சேர்ந்த ராபின் (22) என்பவரும் பணிபுரிந்து வந்தார். ஒன்றாக வேலை செய்தபோது பழகி, இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். இந்தக் காதல் விவகாரம் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தெரிந்ததாகவும், அவர்கள் சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.

மர்மமான அறை எண் 103

இந்நிலையில், நேற்று ராபின் சென்னை, வேப்பேரி சர்ச் சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எண் 103-ஐ எடுத்துள்ளார். ராபினும் திரிஷாவும் அந்த அறையில் தங்கியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் ராபின் அறையை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு லாட்ஜிலிருந்து வெளியே சென்றுவிட்டதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே, இரவு நேரத்தில் தங்கும் விடுதிக்கு ஒரு மர்மமான தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒரு பெண், அறை எண் 103-ல் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். உடனடியாகச் சென்று பார்த்த ஊழியர்கள், அதிர்ச்சியடைந்து மேலாளருக்குத் தகவல் அளித்தனர். மேலாளர் மாற்று சாவி மூலம் கதவைத் திறந்து பார்த்தபோது, திரிஷா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து வேப்பேரி போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திரிஷாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாட்ஸ்அப் தகவல் அளித்த அதிர்ச்சி

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், காதலர்களான ராபினும் திரிஷாவும் சண்டை போட்டுக்கொண்டதாகவும், ராபின் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது திரிஷா தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பின்னர், ராபின், திரிஷாவின் தோழியான ஸ்வேதா என்பவருக்கு வாட்ஸ்அப் மூலமாகத் தகவல் தெரிவித்துள்ளார். அதில், திரிஷா தற்கொலை செய்துகொண்டதாகவும், தானும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த ஸ்வேதா, உடனடியாக ராபினின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் ராபினின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

ராபின் தற்கொலை குறித்து சோழவரம் போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் காதலன், காதலி தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.