தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி முன்பு தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை... போலீசார் அதிரடி கைது

பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார்மயமாக்குவதைத் தடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி முன்பு தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை... போலீசார் அதிரடி கைது
சென்னை மாநகராட்சி முன்பு தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை
வாழ்வாதாரத்தைக் காக்கக் கோரிப் போராடி வரும் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை, இரண்டாவது நாளாகக் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். மண்டலங்கள் 5 மற்றும் 6-க்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்களைத் தனியாரிடம் ஒப்படைப்பதைத் தடுக்கக் கோரியும், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும், கடந்த இரண்டு மாதங்களாக இந்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் தூய்மைப் பணியாளர்கள், நேற்று கொருக்குப்பேட்டையில் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டு, மூன்று மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டனர். அதன் பிறகு பல்வேறு தனியார் மண்டபங்கள் மற்றும் சமூக நலக்கூடங்களில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் பெரம்பூர் ரயில் நிலையம் முன்பு இறக்கிவிடப்பட்டதாகப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதில், 40 பெண் பணியாளர்களும் இருந்தனர். பாதுகாப்பற்ற சூழலில் நள்ளிரவில் விடுவிக்கப்பட்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கொருக்குப்பேட்டை அருகே, ஒரு பெண் பணியாளரின் வீட்டில் 13 பெண் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அங்கும் வந்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்து துன்புறுத்தியதாகவும், அப்போது ஒரு பெண் பணியாளர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பணியாளர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர்.

"இரண்டு மாதங்களாக வேலை இல்லாமல் இருக்கிறோம். ஆனால், எங்களின் கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தக்கூட அனுமதி மறுக்கப்பட்டு, துன்புறுத்தப்படுகிறோம். குறைந்தபட்ச ஊதிய நிர்ணயச் சட்டத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பைக்கூட மாநகராட்சி இன்னும் அமல்படுத்தவில்லை," என்று போராட்டக்காரர்கள் குமுறினர்.

தூய்மைப் பணியாளர்கள் மண்டலங்கள் 5 மற்றும் 6-ல் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், தங்களை தனியார்மயமாக்குவதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.