தமிழ்நாடு

காகங்கள் உயிரிழப்பு: சென்னையை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்!

சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் தொடர்ந்து உயிரிழந்த நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

காகங்கள் உயிரிழப்பு: சென்னையை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்!
Bird flu threatens Chennai
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அடையார் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உறுதியானது பறவைக் காய்ச்சல் பாதிப்பு

சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் ஓஎம்ஆர் பகுதிகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தன. இந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, போபாலில் உள்ள தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. சோதனையின் முடிவில், அந்தக் காகங்களுக்குப் 'பறவைக் காய்ச்சல்' இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தீவிர எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் உள்ளதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து கேரளா மற்றும் பீகார் மாநிலங்களிலும் இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், தேசிய அளவில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள்

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்கக் கால்நடை பராமரிப்புத் துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தொடக்கூடாது: இறந்து கிடக்கும் காகங்கள் அல்லது இதர பறவைகளை எக்காரணம் கொண்டும் வெறும் கைகளால் தொடக்கூடாது.

தகவல் அளித்தல்: பறவைகள் திடீரென மர்மமான முறையில் இறப்பதைக் கண்டால், உடனடியாக அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பாதுகாப்பான அடக்கம்: உயிரிழந்த பறவைகளை அப்புறப்படுத்தும்போது, குறைந்தது 8 அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.