சென்னை கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எதிரே, குடிபோதையில் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த நபரை, பாதிக்கப்பட்ட பெண்ணே துணிச்சலாகப் பிடித்துக் தட்டிக்கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
பழச்சாறு கடைக்குச் சென்றபோது நேர்ந்த அவலம்
சென்னை கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள ஒரு பழச்சாறு கடைக்கு இரண்டு பெண்கள் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு குடிபோதையில் வந்த இருவர், அந்தப் பெண்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்தாலும் நிலைகுலையாத ஒரு பெண், தப்பி ஓட முயன்ற அந்த நபரைத் தேடிச் சென்று கையும் களவுமாகப் பிடித்தார். நடுரோட்டில் அந்த நபரை நிறுத்தி, அவர் செய்த அத்துமீறல் குறித்து ஆவேசமாகத் தட்டிக்கேட்டார்.
பெண் போலீசாரிடமும் அத்துமீறல்?
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் வெளியிட்ட வீடியோவில் ஒரு அதிர்ச்சிகரமான தகவலையும் குறிப்பிட்டுள்ளார். தான் அந்த நபரைப் பிடித்துக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில் கூட, அந்த நபர் அங்கிருந்த ஒரு பெண் போலீசாரிடம் இதே போன்ற பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
வைரலாகும் வீடியோ
நேற்று இரவு நடந்த இந்தச் சம்பவத்தை முழுவதுமாக வீடியோ எடுத்த அந்தப் பெண், அதனைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தையும் டேக் (Tag) செய்துள்ளார். இந்தப் புகார் குறித்து கிண்டி போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
LIVE 24 X 7









