தமிழ்நாடு

'படையாண்ட மாவீரா' திரைப்படம்: காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்ததன் பின்னணி..படக்குழுவினர் விளக்கம்!

காடுவெட்டி குருவின் வரலாற்றை ஆவணப்படுத்தியதன் பின்னணியில் இருந்த வலி, வேதனை மற்றும் கனவுகளைத் திரையுலகினர் முன்னிலையில் இயக்குநர் வெளிப்படுத்தினார்.

'படையாண்ட மாவீரா' திரைப்படம்: காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்ததன் பின்னணி..படக்குழுவினர் விளக்கம்!
காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்ததன் பின்னணி குறித்து படக்குழுவினர் விளக்கம்!
இயக்குநர் வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ள இப்படத்தின் வெற்றிக்கு ஆதரவு கோரிப் பேசிய படக்குழுவினர், தமிழக அரசியல் களத்தில் மறக்கப்பட்ட தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கியதன் பின்னணியையும், அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் குறித்தும் விரிவாகப் பேசினர்.

'போராளி'யின் மறுபக்கத்தை வெளிப்படுத்தும் படைப்பு

இந்நிகழ்வில் பேசிய வசனகர்த்தா பாலமுரளி வர்மா, காடுவெட்டி குருவின் உண்மை முகம் மக்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டினார். அவர் ஒரு மக்கள் தலைவர் என்பதை நிரூபிக்கும் வகையில், ஜெயங்கொண்டத்தில் நிலக்கரி சுரங்கப் பணிகளை எதிர்த்தது, அரியலூர் வெள்ள நிவாரணத்திற்காக வட்டாட்சியர் அலுவலகத்தை மிரட்டியது, அழகாபுரத்தில் அம்பேத்கருக்கு முழு உருவ சிலை அமைத்தது, மற்றும் கிராமங்களில் நிலவி வந்த இரட்டைக் குவளை முறையை ஒழித்தது எனப் பல்வேறு சமூகப் போராட்டங்களை அவர் முன்னெடுத்ததாகத் தெரிவித்தார். இத்தகைய ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டியது ஒரு படைப்பாளியின் கடமை என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், "சமூக வலைதளங்களில் காடுவெட்டி குரு குறித்து கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பம் தவறானது என்பதை இப்படத்தின் திரைக்கதையைப் படித்த பிறகுதான் உணர்ந்தேன். இது சாதிய திரைப்படம் அல்ல; ஒரு மனிதன் எப்படி நேர்மையாக வாழ்ந்தான், அதனால் எப்படி வஞ்சிக்கப்பட்டான் என்பதைப் பேசும் ஒரு திரைப்படம்" என்று கூறி, படத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிய வைத்தார்.

சினிமாவின் இன்றைய நிலை குறித்து கவிப்பேரரசு வைரமுத்துவின் கவலை

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து, இன்றைய தமிழ் சினிமா, வாழ்க்கையில் இருந்து விலகி, படத்தைப் பார்த்து படம் எடுக்கிறது என்று வேதனை தெரிவித்தார். "வாழ்க்கை என்பது நிஜம், ரத்தமும் வியர்வையும் கலந்தது. இத்தகைய உண்மை வாழ்க்கையைப் படமாக்கினால்தான் பார்வையாளர்களுக்கும் படைப்பிற்கும் ஓர் இணைப்பு ஏற்படும்," எனக் கூறிய அவர், `படையாண்ட மாவீரா` போன்ற படங்கள், மக்களின் உணர்வோடு கலக்கும் எனவும், இது ஒரு உண்மையான போராளியின் கதை என்பதால் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மறைக்கப்பட்ட தலைவர்களின் வரலாற்றை வெளிக்கொணரும் முயற்சி

இயக்குநர் வ. கௌதமன் தனது உரையில், தனது தந்தையும், காடுவெட்டி குருவின் தந்தையும் நண்பர்கள் என்பதைப் பகிர்ந்துகொண்டார். "இந்த மண்ணில் இருள் மண்டி கிடக்கிற குப்பைகளும், அழுக்குகளும் அகற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் 'படையாண்ட மாவீரா'. இந்த முயற்சியை வீழ்த்த பலர் மறைமுகமாகச் செயல்படுகிறார்கள்," என்று வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும், தமிழரசன் மற்றும் மேதகு பிரபாகரன் போன்ற மறைக்கப்பட்ட தலைவர்களின் வரலாற்றையும் படைப்பாக உருவாக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என அவர் உறுதியாகக் கூறினார்.

திரள் நிதி (Crowd Funding) முறையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டதாகவும், கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் பல நட்சத்திர நடிகர்கள் இதில் நடித்திருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் வந்த எதிர்மறையான கருத்துகளால் தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும், இருப்பினும் இந்தப் படம் வெற்றியை நோக்கிப் பயணிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

இப்படத்தில் இளவரசு, சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.