தமிழ்நாடு

பிரதமர் மோடி ஏசி யோஜானா: இலவசமா 5 ஸ்டார் ஏசியா? மக்களே உஷார்!

தமிழக அரசு இலவச ஏசி தருவதாகவும், பிரதமர் திட்டத்தில் இலவச ஏசி வழங்குவதாகவும் போலி விளம்பரங்கள் இணையதளத்தில் கடந்த ஒரு வாரமாக சுற்றி வருகின்றன. இலவச ஏசி பெற வீடியோவில் காணும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடும் நிலையில், இதனை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

பிரதமர் மோடி ஏசி யோஜானா: இலவசமா 5 ஸ்டார் ஏசியா? மக்களே உஷார்!
pm modi free ac yojana scheme its fake
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் தங்களது வீட்டிற்கு ஏசி வாங்க வேண்டும் என முடிவு செய்கின்றனர். இதற்கு ஏற்றார் போல் பல தள்ளுபடி ஆஃபர்களையும் ஏசி விற்பனை செய்யும் நிறுவனங்கள் அறிவித்து பொதுமக்களை கவர்கின்றனர்.

அதிக விலை கொடுத்து ஏசி வாங்குவது நடுத்தர ஏழை மக்களால் முடியாத காரியம். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசின் பிரதமர் திட்டத்தின் கீழ் இலவசமாக ஏசி பொதுமக்களுக்கு வழங்கப்பட இருப்பதாக ஒரு காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகின. குறிப்பாக இலவச ஏசியை பெறுவதற்கு அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்திற்குச் சென்று தகவல்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடி ஏசி யோஜனா-2025:

குறிப்பாக காற்றில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், மின்சார தேவை மற்றும் மக்களின் மின் கட்டணங்களை குறைக்கும் நோக்கத்திலும் '5 ஸ்டார் ஏசி'யை மத்திய அரசு இலவசமாக வழங்க உள்ளது என மக்களை நம்பும் வகையில் பல்வேறு வீடியோ விளம்பரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பிரதமர் மோடி ஏசி யோஜனா -2025 என்ற பெயரில், மே மாதம் அறிமுகமாகும் இந்த திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்யலாம் எனவும் பதிவு செய்தால் 30 நாளில், இலவச ஏசி கிடைக்கும் என்று விளம்பரம் செய்தனர்.இந்த திட்டத்துக்காக, 1.50 கோடி ஏசி தயாராக இருப்பதாகவும் தகவல்கள் பரவின. மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டத்தின் கீழ், 1.50 கோடி ஏசி வழங்கப்படுவதாக பரவும் தகவல்கள் போலியானவை. மின்துறை அமைச்சகத்தில் இருந்து இதுபோன்ற எந்தவித திட்டமும் அறிவிக்கப்படவில்லை' என கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பெயரில் இலவச ஏசி விளம்பரம்:

இந்த நிலையில் பெரும்பாலான மக்களுக்கு இந்த தகவல் சென்றடையாததால் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சைபர் கிரைம் மோசடி கும்பல் தமிழக அரசு இலவசமாக ஏசி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக விளம்பரம் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இந்த வீடியோவில் இலவசமாக அரசிடம் இருந்து ஏசி பெற வேண்டும் என்றால் குறிப்பிட்ட இணையதளத்திற்குள் சென்று, தங்களது தகவல்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

அந்த இணையதளமும் அரசு இணையதளம் போன்று வீடியோவில் காட்டுகின்றனர். இந்த விளம்பரத்தை சுமார் ஐந்து மில்லியன் நபர்கள் கடந்த ஒரு வாரத்தில் பார்த்துள்ளனர் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு வீடியோவிலும் விதவிதமான இணையதள முகவரியை கொடுத்து அதில் பொதுமக்களை பதிவு செய்யுமாறு தெரிவிக்கின்றனர். இது முற்றிலுமாக சைபர் கிரைம் மோசடிக்கு வழிவகுக்கும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



மத்திய அரசு பிரதமர் இலவச ஏசி திட்டம் என்பது போன்று தமிழக அரசு இலவச ஏசி வழங்குகிறது அதற்கு முன்பதிவு செய்யுமாறு கூறி சைபர் கிரைம் மோசடி கும்பல் களமிறங்கி இருக்கலாம் என பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை நம்பி தகவல்களைப் பகிர்ந்தால் உங்கள் வங்கி தகவல்கள், தனிப்பட்ட தகவல்களை திருடி பணத்தை கொள்ளை அடிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். தமிழக அரசின் பெயரை பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடிக்கு வழிவகுக்கும் இந்த சமூக வலைதள விளம்பரங்களை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து பின்னால் இருக்கும் மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.