தமிழ்நாடு

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை பழகிப்போன விஷயமாகிவிட்டது-நடிகை கஸ்தூரி

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு என்ற விஷயத்தில் ஜெயலலிதாவை மிகவும் இழக்கிறோம். தற்போது பாலியல் வன்கொடுமை என்பது பழகிப்போன ஒரு விஷயமாகிவிட்டது என நடிகை கஸ்தூரி பேட்டி

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை பழகிப்போன விஷயமாகிவிட்டது-நடிகை கஸ்தூரி
கன்னியாகுமரியில் நடிகை கஸ்தூரி பேட்டி
கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நடிகை கஸ்தூரி இன்று வருகை தந்தார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது அவர், “நிதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை நடத்தி வருகிறார்.

நீட் விவகாரம் குறித்து பேசவில்லை

கடந்த இரண்டு ஆண்டுகள் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பங்கேற்காத நிலையில் தேர்தலுக்கு முன் நடைபெறும் கடைசி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் என்றால் இதற்கு என்ன காரணம் சொல்ல முடியும். தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து இந்த காலகட்டத்தில் மட்டும் அக்கறை வந்துள்ளதா அல்லது குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் மேல் அவசர அக்கறை வந்துள்ளதா என்பதைத்தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார்.

பிரச்சனை வந்துள்ளது, ஆனால் அது நாட்டு மக்களுக்கு இல்லை. அவர்களது வீட்டு மக்களுக்கு தான் பிரச்னை. முதலமைச்சர் ஏதாவது ஒரு காரணத்தை காட்டி பிரதமரை சந்தித்து வருகிறார். நீட் உட்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்த திமுக அரசு 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், ஏன் பிரதமரிடம் இதுகுறித்து இதுவரை பேசவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.

பிரதமருக்கு வலுசேர்ப்பேன்

வரும் 2026 தேர்தலில் தனது பங்களிப்பு முழு மூச்சுடன் முழு மனதுடன் இருக்கும். ஆப்ரேஷன் சிந்தூர் நடைபெற்றதற்கு பின் முழுமையாக கட்சி சார்ந்த அரசியலுக்கு வந்துள்ளேன். ஒரு ஆன்மீகத்தையும், ஆத்ம தைரியத்தையும் அளிக்கும் பெண்களுக்கு மிகவும் பக்கபலமாக இருக்கும். பிரதமர் மோடிக்கு வலு சேர்க்கும் விதமாக செயல்படுவேன் என தெரிவித்தார்.

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு என்ற விஷயத்தில் ஜெயலலிதாவை மிகவும் இழக்கிறோம். ஆனால் தற்போது பாலியல் வன்கொடுமை என்பது பழகிப்போன ஒரு விஷயமாக ஆகிவிட்டது. தமிழக அரசின் மெத்தனப்போக்கும் பாரபட்சமான ஒரு போக்குமே இதற்கு காரணம். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பை ஒட்டு மொத்தமாக வரவேற்கிறோம்.
பொள்ளாச்சி வழக்கை தாங்கள்தான் வெளிக்கொண்டு வந்தோம் என பேசும் கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் தங்களது குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகளை ஏன் வெளிக்கொண்டு வர மறுக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

தவெகவிற்கு இளைஞர்கள் ஆதரவு

தவெகவிற்கு இளைஞர்கள் மத்தியிலும், குறிப்பிட்ட சமுதாயத்தின் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக முதல்வராகவே முடிவெடுத்துள்ளார். தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என்பது நடக்காத காரியம்” எனவும் தெரிவித்தார்.