தமிழ்நாடு

இண்டிகோ விமானத்தில் நடந்த பாலியல் அத்துமீறல்; திமுக கவுன்சிலரை தட்டிதூக்கிய போலீஸ்!

சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் விமானப் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகத் தி.மு.க. கவுன்சிலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இண்டிகோ விமானத்தில் நடந்த பாலியல் அத்துமீறல்; திமுக கவுன்சிலரை தட்டிதூக்கிய போலீஸ்!
DMK Councillor
கடந்த 26-ஆம் தேதி சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. விமானத்தில் பயணிகள் அமர்ந்திருந்தபோது, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் தியாகு ஆகிய இருவர் மதுபோதையில் அங்கிருந்த விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்

பாதிக்கப்பட்ட விமானப் பணிப்பெண், இது குறித்து சென்னை மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பிரபாகரன், திருவள்ளூர் நகராட்சியின் 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் என்பதும், மற்றொருவரான தியாகு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த நிலையில் பிடிபட்டனர்

வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் உத்தரவிட்டனர். இருப்பினும், அவர்கள் ஆஜராகாமல் தலைமறைவாகினர். இந்த நிலையில், நேற்று டெல்லியிலிருந்து மீண்டும் சென்னைக்கு இண்டிகோ விமானம் மூலம் அவர்கள் வந்து இறங்கியபோது, விமான நிலையத்திலேயே காத்திருந்த காவல்துறையினர் பிரபாகரன் மற்றும் தியாகு ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.