தமிழ்நாடு

கும்பகோணம் அருகே அதிர்ச்சி சம்பவம்.. மூதாட்டியை ஆற்றில் தள்ளிவிட்ட பெண்!

கும்பகோணம் அருகே தாயை ஆற்றில் தள்ளி கொள்ள முயன்ற மகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் அருகே அதிர்ச்சி சம்பவம்.. மூதாட்டியை ஆற்றில் தள்ளிவிட்ட பெண்!
Woman pushes old woman into river
திருவிடைமருதூர் அருகே மூதாட்டியை காவிரி ஆற்றில் தள்ளி கொள்ள முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா ஆடுதுறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் நேற்று வயது முதிர்ந்த மூதாட்டியை பெண் ஒருவர் ஆற்றில் தள்ளிவிட்டு ஓடுவதை அங்கிருந்த சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றில் மூழ்கிய மூதாட்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததோடு அவரை ஆற்றில் தள்ளி விட்ட பெண்ணை பிடித்து சத்தம் போட்டனர்.

இதுகுறித்து உடனடியாக திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த போலீசார், மூதாட்டி ஆற்றில் தள்ளிவிட்ட பெண்ணை பிடித்து விசாரித்த போது அப்பெண் தெரிவித்த தகவல் போலீசாரை மட்டுமின்றி அங்கிருந்த பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலை சேர்ந்த ஜோதி என்ற அந்த பெண், ஆற்றில் தள்ளிவிட்டது தன்னுடைய தாய் விசாலாட்சி என்று தெரிவிதித்தார். மகளே தாயை ஆற்றில் தள்ளி கொலை செய்ய முயன்றதை அறிந்து போலீசார் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து இருவரையும் திருவிடைமதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஜோதிடம் அவர்களது உறவினர்களின் தகவலைப் பெற்று காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது ஜோதி சற்று மனநிலை சரியில்லாதவர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜோதியையும் அவரை தாய் விசாலாட்சி இருவரையும் அவர்களது உறவினர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த அங்கிருந்த சிலர், அதனை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.