தமிழ்நாடு

விஜய் மீது ஆக்‌ஷன் எடுங்க.. வைஷ்ணவி பரபரப்பு புகார்

தவெக தொண்டர்கள் தனது புகைப்படங்களை மோசமாகச் சித்தரித்து பரப்பி வருவதாக இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி கோவை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

விஜய் மீது ஆக்‌ஷன் எடுங்க.. வைஷ்ணவி பரபரப்பு புகார்
விஜய் மீது ஆக்‌ஷன் எடுங்க.. வைஷ்ணவி பரபரப்பு புகார்
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் தன்னை அவதூறாகவும், ஆபாசமாகவும் விமர்சிப்பதாகவும், தனது புகைப்படங்களை மோசமாகச் சித்தரித்து பரப்பி வருவதாக இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி கோவை மாநகர ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தீவிரமாக பணியாற்றி வந்த கோவையை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி, கட்சியில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால் தவெகவில் இருந்து விலகுவதாக பரபரப்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, தவெகவில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் கடந்த மே மாதம் திமுகவில் இணைந்தார். அவருடன் மேலும் சில இளைஞர்களும் திமுகவில் இணைந்தனர்.

இதனையடுத்து, அவரை தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வரும் நிலையில், இதனை கண்டுகொள்ளப்போவதில்லை என வைஷ்ணவி யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த வந்தார்.

இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று வைஷ்ணவி ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், “நான் தவெகவில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உறுப்பினராக இணைந்து மக்கள் பணியை செய்து வந்தேன். சமூக வலைதளங்களிலும் கட்சியின் கொள்கைகளை பரப்பி வந்தேன்.

அதன் பிறகு கடந்த மே மாதம் மூன்றாம் தேதி கொள்கை வேறுபாட்டினாலும் மக்கள் பணி செய்ய தடுத்ததாலும் அக்கட்சி நிர்வாகிகளாலும் அதில் இருந்து விலகினேன். இந்த நிலையில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி திமுகவில் இணைந்து பணிகளை செய்து வருகிறேன். சமூக வலைதளங்களில் மக்கள் நலன் கருதி என்னுடைய கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன். ஆனால் கடந்த 3 மாதமாக, தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் என்னைப் பற்றி அவதூறாகவும் ஆபாசமான வார்த்தைகளாலும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் என்னுடைய புகைப்படங்களை மிக மோசமாக சித்தரித்து மீம்ஸ் வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். தமிழக வெற்றிக் கழக தொண்டர்களால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

இதை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கண்டிப்பாக என்று பொறுத்து இருந்தேன். ஆனால் அதைப் பற்றி எந்த ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை. எனவே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீதும் அவர்கள் கட்சி தொண்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.