தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் விவகாரம்: 62  பேர் மீது வழக்குப்பதிவு.. போலீசார் அதிரடி!

திருப்பரங்குன்றம் போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்,பொதுமக்கள் உட்பட 62  பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: 62  பேர் மீது வழக்குப்பதிவு.. போலீசார் அதிரடி!
Thiruparankundram Issue
மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவை ஒட்டி, மலை மீது கொடியேற்ற இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளித்ததைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் சாலை மறியல் செய்த பாஜகவினர் உட்பட மொத்தம் 62 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போராட்டத்தின் பின்னணி மற்றும் கைது

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் கொடியேற்ற இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தெரு குடியிருப்புவாசிகள் நேற்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என 20-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த போலீசார், திருநகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அவர்களை அடைத்து வைத்தனர்.

பாஜகவினர் நடத்திய சாலை மறியல்

நேற்று மாலை 6 மணியைக் கடந்தும் கைது செய்யப்பட்டவர்களைப் போலீசார் விடுவிக்காததால், அவர்களைப் பார்க்க வந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் மற்றும் ஆதரவாளர்கள் உடனடியாக திருமங்கலம் - மதுரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்படும் விதமாக நடந்த இந்த மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து, அதில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், இரவு 11 மணிக்கு மேல் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

வழக்குப்பதிவு விவரங்கள்

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இரு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனுமதியின்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் விதமாகச் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக, பாஜக நிர்வாகிகள் சிவலிங்கம், மாரி சக்கரவர்த்தி உட்பட 45 பேர் மீது திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலை மேல் இஸ்லாமியர்களைக் கொடி ஏற்ற அனுமதி அளித்ததைக் கண்டித்து, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பழனி ஆண்டவர் கோவில் தெரு குடியிருப்பு வாசிகள் 17 பேர் மீது திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.