தொழில்நுட்பம்

Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடி யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு கெட்ட செய்தி

ஜூன் 17, 2025 முதல் இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியின் உள்ளடக்கத்தில் விளம்பரங்கள் வரும் என அமேசான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையினை எடுக்க கடந்த ஆண்டு முதல் திட்டமிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடி யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு கெட்ட செய்தி
Amazon Prime OTT
Amazon Prime OTT: கொரோனா ஊரடங்கு சமயத்தில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், ஓடிடி தளங்கள் அபரிமிதமான வளர்ச்சியினை பெற்றன. தற்போது கூட பெரிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களே ஓடிடி நிறுவனங்களின் ஒப்புதலுடன் தான் திரையில் வெளியாகும் தேதி அறிவிக்கப்படுகிறது. ஓடிடி தவிர்க்க முடியாத ஒரு பிசினஸாக மாறியுள்ளதும் இதற்கு ஒரு காரணம்.

இந்நிலையில் தான் இந்தியாவின் புகழ்பெற்ற ஓடிடி தளமான, அமேசான் பிரைம் வீடியோ அதன் பயனர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. நீங்கள் படமோ, சீரிஸோ பார்க்கும் போது இடையே விளம்பரம் வரும். அப்படி எந்த தடையும் இன்றி, நீங்கள் காண வேண்டும் என்றால் கூடுதலாக பணம் கட்ட வேண்டும் என்பது தான் அந்த அறிவிப்பு.

அதன்படி, விளம்பரமில்லா ஆட்-ஆன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அமேசான் பிரைம் ஓடிடி. தற்போது நீங்கள் வைத்திருக்கும் சப்ஸ்கிரைப் திட்டத்துடன் மாதத்திற்கு ரூ.129 அல்லது வருடத்திற்கு ரூ.699 கூடுதலாக வழங்கினால் நீங்கள் விளம்பரமில்லாமல் அமேசான் ஓடிடி தளத்தினை பயன்படுத்த முடியும். ஜூன் 17, 2025 முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுத்தொடர்பாக அமேசான் தங்களது பயனர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "புதியதாக தொடங்கப்படும் ஆட்-ஆன் திட்டமானது கவர்ச்சிகரமான உள்ளடக்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்யவும், நீண்ட காலத்திற்கு அந்த முதலீட்டை அதிகரிக்கவும் உதவும். டிவி சேனல்கள் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் சேவைகளை விட அர்த்தமுள்ள வகையில் குறைவான விளம்பரங்களைக் கொண்டிருக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

மற்ற ஓடிடி தளங்கள் எப்படி?

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரானது ரூ.299/மாதம், ரூ.499/3 மாதங்கள், ரூ.1,499/ஆண்டு என்கிற விலையில் பிரீமியம் (விளம்பரமில்லா) திட்டத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஜியோ சினிமாவானது ரூ.149/3 மாதங்கள் & ரூ.499/ஆண்டு விளம்பரத்துடன் கூடிய பிரீமியம் திட்டத்தை கொண்டுள்ளது. விளம்பரமில்லா பிரீமியம் திட்டமாக இருப்பினும், ஹாட்ஸ்டார் விளையாட்டு போட்டிகளின் நேரடி ஒளிப்பரப்பின் போது விளம்பரம் ஒளிப்பரப்படுகிறது. அதன் மூலம் வருமானம் ஈட்டுகிறது.

மறுபுறம், நெட்ஃபிக்ஸ் ஓடிடி முற்றிலும் விளம்பரமில்லா சேவையினை வழங்குகிறது. ஓடிடி தளங்களுக்கிடையே நிலவும் போட்டிகளை சமாளிக்கும் வகையில் அமேசான் பிரைம் விளம்பரமில்லா சேவைக்கு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இதனால் அமேசான் பிரைம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையலாம் என டெக் வல்லுநர்கள் கருதுகின்றனர்.